Published : 20 Jul 2015 10:54 AM
Last Updated : 20 Jul 2015 10:54 AM

விபத்துகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூடுங்கள்: வைகோ

போதை விபத்துகளில் தமிழகத்தில் 718 பேர் இறந்துள்ளனர் என புள்ளிவிபரம் வெளியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, சாலை விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு 2014-ல் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 15,190 பேர் இறந்துள்ளனர். இந்தியா முழுவதும் நடைபெறும் சாலை விபத்துகளில் 14.9 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது என்றும், தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் மதுக்கடைகள்தான் காரணம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெருகிவருவதால் சாலை விபத்துகள் என்பது அன்றாட செய்தியாகிவிட்டது.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 21, 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

ஜனவரி 15, 2015 இல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜெயலலிதா அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கான கொள்கை முடிவை பிப்ரவரி 17, 2015க்குள் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வளரும் தலைமுறையினரும், பெண்களும் கூட மதுவுக்கு அடிமையாகி வருவதாக அதிர்ச்சி செய்திகள் நாளேடுகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருப்பதால், தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழக அமைச்சர் நத்தம் விசுவநாதன் கருத்து கூறி இருக்கிறார். மதுக்கடையினால் வரும் வருவாயை மட்டுமே நம்பி இருக்கின்ற ஜெயலலிதா அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயற்படுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து தன்னெழுச்சியாக போராடி வரும் நிலையில், ஜெயலலிதா அரசு, டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x