Last Updated : 26 Sep, 2019 06:12 PM

 

Published : 26 Sep 2019 06:12 PM
Last Updated : 26 Sep 2019 06:12 PM

கீழடியில் அக்டோபரில் தொல்பொருள் கண்காட்சி நடத்த ஏற்பாடு: மாணவர்கள், பொதுமக்கள் பார்க்க வசதி

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை அளவீட்டுடன் கூடிய வரைபடம் வரையும் பணி நடக்கிறது.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கும் வகையில் அக்டோபரில் தொல்பொருட்கள் கண்காட்சி நடத்த தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் கிடைத்த தொல்பொருட்களை பரிசோதித்ததில் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டுக்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ல் முடிவடைகிறது. தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன்மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழாடி அகழாய்வு மீதான ஆர்வம் தமிழர்களிடம் அதிகரித்துள்ளது.

மேலும் 5-ம் கட்ட அகழாய்வில் இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக், சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் இரட்டை, வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகளும் கிடைத்துள்ளன. தற்போது தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கீழடி அகழாய்வை காண்பதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து வருகின்றனர். இதனால் அக்டோபரில் கீழடியில் மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கும் வகையில் தொல்பொருட்கள் கண்காட்சி நடத்த தொல்லியல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x