Published : 04 Jul 2015 03:09 PM
Last Updated : 04 Jul 2015 03:09 PM

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

காவிரி, முல்லை பெரியாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தமாகா மாவட்ட அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்து, அதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மழைக்காலத்தில் மழைநீர் வீணாகாமல் தடுக்க, தமிழகத்திலுள்ள ஏரி, குளம், கால்வாய்களைத் தூர் வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்.

தேவையான நிதியை ஒதுக்கி, சட்டப்பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் ஹெல்மெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், ஹெல்மெட் கட்டாயமாக அணிவதற்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். 2016- ல் நடைபெற உள்ள தேர்தலுக்காக நாங்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தொடர்ந்து, திருமயத்தில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை வாசன் தொடங்கி வைத்தார்.

அரியலூரில்...

அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். திருச்சி - சிதம்பரம் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும். அரியலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும் என்றார்.

கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.எம் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x