Published : 25 Sep 2019 04:13 PM
Last Updated : 25 Sep 2019 04:13 PM
கூடலூர்
நீலகிரியில், ஒரே வீட்டை 2 தடவை சூறையாடிய ஒற்றை யானையால் சுவர்கள் தரைமட்டமாகி, வீடு மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் பொன்வயல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜெயலட்சுமி என்பவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.
இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் வந்த ஒற்றை யானை வீட்டை முழுவதுமாக இடித்துச் சேதப்படுத்தி உள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதே யானை வீட்டின் ஒரு பகுதி சுவரை இரவு நேரத்தில் இடித்தது. அப்போது அந்த அறையில் இருந்த மாதவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கெனவே, யானை இந்த வீட்டை இடித்த காரணத்தால் பயத்தில் மாதவி மற்றும் அவரது மகள் ஜெயலட்சுமி இருவரும் இரவு நேரத்தில் அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புக்காகத் தங்கி வருகின்றனர்.
அரவிந்தன் மட்டுமே இந்த வீட்டில் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு யானை வீட்டைச் சேதப்படுத்தியபோது அரவிந்தன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஏற்கெனவே இந்த வீட்டின் ஒரு பக்கச் சுவரை யானை இடித்துத் தள்ளிய நிலையில் நேற்று இரண்டாவது முறையாக முழுவதுமாக சேதப்படுத்தி உள்ளதால் இவர்கள் தற்போது வீட்டை இழந்துள்ளனர்.
இதனால் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஜெயலலட்சுமி குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT