Published : 25 Sep 2019 04:12 PM
Last Updated : 25 Sep 2019 04:12 PM
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே பெண் வயிற்றில் கட்டி இருந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி 7 மாதம் சிகிச்சை அளித்ததாக, அரசு மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
சோதனையில் அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளான தடுப்பூசி போடுதல், மாதாந்திரப் பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நலக் காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வார வாரம் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி மாதாந்திரப் பரிசோதனைக்குச் சென்றபோது அஸ்வினி வயிற்று வலி இருப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார். ஆகையால் மருத்துவர் ஸ்கேன் செய்து வருமாறு கூறியுள்ளார், அதனைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை எனவும் நீர்க்கட்டி இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வேறொரு ஸ்கேன் எடுக்கும் மையத்திற்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீர்க்கட்டி தான் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.24) கல்லாவி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் கேட்டதற்குத் தெரியாமல் நடந்து விட்டது என பதில் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் அஸ்வினி வயிற்றிலுள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். கட்டி உள்ளது என்பது கூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சிகிச்சை அளித்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மிகவும் வேதனையுடன் கூறி கதறி அழுதார். அரசு மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக்கூறி, மேலும் தன்னைப் போன்ற பெண்கள் யாரும் இதுபோல் பாதிப்படையக் கூடாது என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் என அஸ்வினி மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கரைத் தொடர்பு கொண்டபோது இது குறித்து விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT