Published : 25 Sep 2019 11:37 AM
Last Updated : 25 Sep 2019 11:37 AM
சென்னை
தமிழக-கேரள நதிநீர் சிக்கல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு எட்டப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக-கேரளா இரு மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சிக்கல்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.25) கேரளா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, முதல்வர் பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"நீராறு-நல்லாறு திட்டம் குறித்தும் நையாறு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகவும் செண்பகவள்ளி நீர்வழிப்பாதையை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று கேரள முதல்வரை சந்தித்துப் பேச உள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
எல்லா விஷயங்களும் பேசித் தீர்க்கப்படும்.
குமரி மாவட்டத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த நெய்யாறு அணை தண்ணீர் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நீர், 2004-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதுகுறித்து கேரள முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எட்டப்படும்.
நதிநீர் சிக்கல்களில் அண்டை மாநிலங்களுடனான உறவு மேம்படுத்தப்படுமா?
அண்டை மாநிலத்துடன் நல்லுறவு இருப்பதால் தான், ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதி நீர் இன்றைக்குத் தமிழகத்திற்கு திறக்கப்பட உள்ளது. ஆந்திர முதல்வர், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இன்று கண்டலேறு அணையிலிருந்து நீரை திறக்க இருக்கின்றனர். அதேபோல, தமிழக-கேரளா நதிநீர் விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக இன்று கேரளா செல்கிறேன். நேரடியாக பேசி நல்ல தீர்வு எடுக்கப்படும்.
19 ஆண்டுகள் கழித்து தமிழக முதல்வர், கேரள முதல்வரைச் சந்திக்கிறார். இரு மாநில உறவுகள் மேம்படுமா?
இரு மாநில விவசாயிகளும் பொதுமக்களும் நலம்பெற வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தையை இரு மாநில முதல்வர்களும் தொடங்கியிருக்கிறோம்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறதா?
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்து விட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் வாயிலாக மாதம்தோறும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் அதிமுகவுக்கு சவாலாக இருக்குமா?
சவாலாக இல்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இது உறுதி.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எதனை முன்வைத்து வாக்கு சேகரிப்பீர்கள்?
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்தார். அதற்கு நேர்மாறாக மக்கள் தீர்ப்பளித்தார்கள். வெறும் 8,080 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. மக்களவைத் தேர்தலின் போது திட்டமிட்டு பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்ததன் காரணமாக மக்களிடம் திமுக வாக்குகளைப் பெற்றது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவோம்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT