Published : 25 Sep 2019 11:33 AM
Last Updated : 25 Sep 2019 11:33 AM

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் யார்? ராமராஜன், மனோஜ் பாண்டியனுக்கு ஏமாற்றம்?

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். இதையடுத்து, அவர் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மே மாதம் ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி, கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், விக்கிரவாண்டி தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. அதிமுக சார்பில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநிந்லையில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதியில் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வழக்கம்போல் காங்கிரஸில் இழுபறி நீடிக்கிறது. மேலிடம்தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்து பட்டியலை அனுப்பியுள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் நாடார்கள் மற்றும் கிறித்துவ நாடார்கள் சமூகத்தினர் அதிகம். ஆகவே இரண்டு கட்சிகளும் அங்கு அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்துகின்றன. அதிமுகவில் மனோஜ் பாண்டியன், ராமராஜன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் போட்டியிட விருப்ப மனு அளித்தாலும் புதுமுகத்தை நிறுத்த உள்ளதாகத் தெரிகிறது. இதனால் ராமராஜன், மனோஜ் பாண்டியன் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் குமரி அனந்தன் போட்டியிடுவார் என பலரும் கூறிவரும் நிலையில் அங்கு மறைந்த காங்கிரஸ் பிரமுகர் ஊர்வசி செல்வராஜ் மகனும் இளைஞர் காங்கிரஸ் முதன்மைப் பொதுச் செயலாளருமான ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெயருக்கு வேட்பாளர் பட்டியல் சென்றாலும் தொகுதியில் போட்டியிட நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவைப் பெற்றவர்களில் பலரும் இன்றுதான் விண்ணப்பமே அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் குமரி அனந்தனுக்குப் பின்னர் செல்வாக்கு உள்ள வேட்பாளர் என்றால் பீட்டர் அல்போன்ஸ் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும் பீட்டர் அல்போன்ஸ் நிற்க விரும்பவில்லை. மாவட்டத் தலைவர் சிவகுமார் விருப்ப மனு அளித்துள்ளார்.

ஆனால் இடைத்தேர்தல் போட்டியில் அதிமுகவினரைச் சமாளித்து, திமுகவினரை வேலை வாங்கி வெல்லும் அளவுக்கு அவருக்கு வசதி இல்லை என கூறப்படுகிறது. ஊர்வசி அமிர்தராஜ் திமுகவினருடன் ஒத்துப்போகும் அளவுக்கும், ஆளுங்கட்சிக்கு எதிராக தாக்குப்பிடிக்கும் அளவுக்கும் வலுவான வேட்பாளர் என்கின்றனர்.

மாணிக் தாகூர் ஆதரவுபெற்ற அமிர்தராஜ் நிறுத்தப்பட்டால் மீண்டும் காங்கிரஸ் தொகுதியை தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்தமுறை நாங்குநேரியைத் தக்கவைக்காவிட்டால் திமுகவிடம் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியைக் கேட்டு வாங்க முடியாது என்பதால் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் வசதி படைத்த, பெரும்பான்மை வாக்காளர் உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர், அதிமுகவுக்கு எதிராக தாக்குப்பிடித்து திமுகவையும் அரவணைத்து வேலை செய்ய வைக்கும் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் என்பதால் அவரையே நிறுத்த வாய்ப்பு அதிகம் என்கின்றனர் தொகுதி காங்கிரஸார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x