Published : 24 Sep 2019 05:13 PM
Last Updated : 24 Sep 2019 05:13 PM
மதுரை
கண்மாய்களைத் தூர்வாரும் குடிமராமத்துப்பணிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 சதவீதம் அரசியல்வாதிகளுக்கு கமிஷனாக சென்றுவிடுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமை வகித்தார். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நன்செய் -புன்செய் விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன் கூறும்போது, "25 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உசிலம்பட்டி 58-ம் கால்வாய் திட்டம் முடிக்கட்பட்டு கடந்த ஆண்டு இந்த கால்வாயில் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது. டி.புதூர் என்னும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பை சரி செய்து தண்ணீர் திறந்துவிடுவதாக சொன்னார்கள். அதன்பிறகு தண்ணீர் திறந்துவிடவில்லை. உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 33 கால்வாய்கள் எங்கு இருக்கிறது என்பது விவசாயிகளுக்கே தெரியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்த கண்மாய்களை அடையாளப்படுத்த வேண்டும். திடீரென்று வைகை அணை உபரிநீர் வெள்ளக்காலங்களில் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டால் கண்மாய்களுக்கு செல்லாமல் கிராமங்களை மூழ்கடித்துவிடும்" என்றார்.
விவசாயி மணவாள கண்ணன், "செல்லம்பட்டி ஒன்றியம் குறவக்குடி பஞ்சாயத்தில் கடந்த 8 ஆண்டாக இதுவரை கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. அக்டோபர்-2 ல் நடக்கும் கிராம சபை கூட்டமாவது இந்த முறை எங்கள் பஞ்சாயத்தில் நடத்த வேண்டும்.
ஆட்சியர்களைக் கூட 3 ஆண்டிற்கு ஒருமுறை மாற்றிவிடுகிறார்கள். ஆனால், இந்த கிராம ஊராட்சி செயலாளர்களை மாற்றப்படாமல் அந்தந்த கிராம ஊராட்சிகளில் இவர்கள் மூடிசூடா மன்னர்களாக வலம் வருகிறார்கள். நிர்வாகம் சரியில்லை. தவறுகள், மோசடிகள் மறைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி, "தமிழக கரும்பு விவசாயிகளுக்கு அறுவடை செய்த கரும்புகளுக்கு இதுவரை சர்க்கரை ஆலைகள் பணம் கொடுக்கவில்லை. அரசு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கியதாக அறிவிப்பு வந்தும் இதுவரை விவசாயிகளை பணம் சென்றடையவில்லை. விவசாயிகள் பணம் இப்படி அரசிடம் நிற்கிறது. ஆனால், மற்றொரு புறம் அதே அரசு வங்கிகள், கடனை கட்டவில்லை என்று நெருக்கடி கொடுக்கின்றனர்" என்று முறையிட்டார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர் த.சு.ராஜசேகர், "அனைத்து விவசாயிகளிடமும் அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் கேட்டு பெறப்பட்டு, அவர்களுக்கு பணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரிரு மாதத்தில் விவசாயிகள் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார்.
அப்போது குறுக்கிட்ட பழனிசாமி; ஒவ்வொரு குறைதீர்கூட்டத்தில் சொல்கிறீர்கள். விவசாயிகளுக்கு பணம் வந்தபாடில்லை. அதனால், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன் பாக்கி தொகை ரூ. 17 கோடி கேட்டு 26ம் தேதி காத்திருப்போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.
35% கமிஷன்.. மொட்டை அடித்த தலையில் முடி வெட்டும் கதை
விவசாயி திருப்பதி பேசும்போது, "கண்மாய்களில் நடக்கும் குடிமராமத்து பணிகள், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் நடக்கவில்லை.
அதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 சதவீதம் அரசியல் வாதிகளுக்கு கமிஷனாக சென்றுவிடுகிறது. வருமானம் தரக்கூடிய பணியாக நடப்பதால் அரசு இயந்திரங்கள் இந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
உதாரணமாக செல்லூர் கண்மாய் கடந்த ஆண்டுதான் மராமத்துப்பணி செய்தனர். இந்த ஆண்டு மீண்டும் தூர்வாருகின்றனர். மொட்டை அடித்த தலையில் முடி வெட்டும் கதையாகதான் இந்த குடிமராமத்துப்பணி நடக்கிறது” என்று கூற வேதனை கலந்த சிரிப்பை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.
பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடி இருந்தாலே..
விவசாயி கோபாலகிருஷ்ணன், "மேலூர் ஒரு போக பெரியார் பாசனக்கால்வாயில் வழக்கமாக ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு பெரியாறு அணை நீர் மட்டம் 126 அடியை தாண்டிவிட்டது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தும் பொதுப்பணித்துறை தண்ணீர் திறக்கவில்லை. தற்போது தண்ணீர் திறந்தால் விவசாயம் செய்வதற்கு சரியான தருணம். அதனால், அதிகாரிகள் தாமதிக்காமல் மேலூர் ஒரு போக பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பென்னி குயிக் சிலை திறக்க அனுமதி வழங்கப்படுமா?
விவசாயி மணிகண்டன் பேசுகையில், "பென்னிகுயிக் பிரிட்டிஷ் ஆட்சியாளராக இருந்தாலும் தேனி, மதுரை மாவட்ட மக்களை வாழவைக்க, பெரியாறு அணை கட்டினார். அவரை இரு மாவட்ட மக்களும் தெய்வமாகவே வழிப்பட்டு வருகிறோம். அவரை கவுரப்படுத்த உசிலம்பட்டி அருகே நத்தப்பட்டியில் பொதுமக்கள் சேர்ந்து அவருக்கு சிலை அமைத்துள்ளோம். அந்த சிலையை திறக்க அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் உள்ளனர். அவரை, மதம், சாதிக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால், அவரை சிலையை திறப்பதால் எந்த சிக்கலும், பிரச்சனையும் இல்லை. ஆட்சியர் இந்த சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT