Published : 24 Sep 2019 04:41 PM
Last Updated : 24 Sep 2019 04:41 PM
பெரியகுளம்
அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கே சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி உண்டு. அருவியில் குளிக்க பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சபரிமலை, பழநி செல்லும்பக்தர்கள் மற்றும் கேரளா செல்லும் சுற்றுலாப்பயணிகள் பலரும் இங்கு வந்து செல்வர்.
அருவியில் நீர் சீராக விழுந்து கொண்டிருந்ததால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆபத்தான குழிகளும் மூடப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் அச்மின்றி குளித்து வந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்டப குதிகளில் அதிக மழை பெய்து இந்த அருவியில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை இன்று தடைவிதித்துள்ளனர். இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து ராசிபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், "குற்றாலம் போன்ற இடங்களில் குளிக்கத் தடைவிதித்தாலும் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வனத்துறைக்கு வருமானமும் கிடைக்கும். வெகுதூரத்தில் வந்தவர்களுக்கும் அருவியைப் பார்த்த திருப்தியும் கிடைக்கும். ஆனால் இங்கே அருவியைப் பார்க்கக்கூடவிடாமல் திருப்பியனுப்புகின்றனர்" என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், "ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க முடியவில்லை. ஆர்வமிகுதியால் ஆபத்தான மற்றும் வனப்பகுதிக்கும் சென்று விடுகின்றனர். எனவே நீர் அதிகமாக இருந்தால் அருவி பகுதிக்கு அனுமதிப்பதில்லை" என்று விளக்கம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT