Published : 24 Sep 2019 12:37 PM
Last Updated : 24 Sep 2019 12:37 PM

'பிகில்' இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?- தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித் துறை நோட்டீஸ்

சென்னை

'பிகில்' இசை வெளியீட்டு விழாவுக்கு கல்லூரி அனுமதி கொடுத்தது ஏன் என்று உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தால் சுபஸ்ரீ மரணம் நடந்திருக்காது என்று பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்வினையாற்றினர்.

இந்நிலையில், 'பிகில்' இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது என்று உயர்கல்வித் துறை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு உயர்கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் தொடர்பான பேச்சுகள் அடங்கிய விழாவை நடத்த கல்வி நிறுவனத்தில் இடம் உண்டா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பதிலளித்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் இருந்து தனியாக உள்ள அரங்கம் என்பதால், ஆடிட்டோரியத்தில் இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மே மாதம் சென்னை வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கோபாலபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் மாணவிகளிடையே கலந்துரையாடினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர் பேச தனியார் கல்லூரியில் அனுமதி அளித்தது ஏன் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி, விளக்கம் கேட்டு அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது நினைவுக்கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x