Published : 24 Sep 2019 11:27 AM
Last Updated : 24 Sep 2019 11:27 AM
பழநி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 17 பேரை மீட்ட சார் ஆட்சியர் உமா, அவர்கள் அனைவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தார்.
பழநி ஆன்மீக ஸ்தலம் என்பதால் மனநலம் பாதிக்கப்பட்டோர், மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களை பராமரிக்க முடியாத உறவினர்கள் பழனி அடிவாரம் பகுதியில் கொண்டுவந்து விட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு ஆதரவின்றி விடப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பழனி அடிவாரம், கிரிவீதி, பேருந்துநிலையம் உட்பட பழனி நகர் முழுவதும் சுற்றி வருகின்றனர். இவர்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் பொதுமக்களாலும் இத்தகைய மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துன்பம் நேர்கிறது.
பழநி அடிவாரத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிவருபவர்களுக்கு சரியான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று (திங்கள்கிழமை) பழனி சார் ஆட்சியர் உமா தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட தலைமை மனநலமருத்துவர் உள்ளிட்ட அதிகாரிகள் பழனி அடிவாரம் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரை மீட்டனர்.
அப்போது அவர்களிடம் பேசிய போது ஒருவர் நான் பிரதமர் மோடியின் நண்பர் என்றார். இன்னொருவர் தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். ஒருவர் நான் மன்னர் வம்சம் என்று கூறினார். லண்டனில் வசிப்பவர் என்றும் இன்னும் சில வித்தியாசமான அறிமுகங்களாலும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது குறித்து சார் ஆட்சியர் மீனா, "மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பழனி அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நிலக்கோட்டையில் உள்ள அரசு மனநலக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முறையான மருத்துவ வசதி, உணவு, உடை, தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இதில் குணமடைவோருக்கு கைத்தொழில்களை கற்றுத்தரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர்" என்று தெரிவித்தார். சார் ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT