Published : 23 Sep 2019 05:36 PM
Last Updated : 23 Sep 2019 05:36 PM
மதுரை
ரயில்வே துறையில் குரூப் 'டி' பணியில் வடமாநில இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரயில்வே தேர்வு வாரியத்துக்கு தமிழக மாணவர்கள் தருவதில்லை என்பதே காரணம் எனக் கூறுகிறார் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி.
ஒருகாலத்தில் ரயில்வே துறையில் ஒருவர் வேலை பார்த்தால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் வேலை வாய்ப்பு பெறமுடியும் என்ற நிலை இருந்தது. தந்தை, மகன், பேரன் என்ற வாரிசு அடிப்படையில் ஓய்வு பெறும்போதே ஒருசில பணியிடங்களில் சேர்த்துவிடும் வாய்ப்பெல்லாம் உண்டு.
ஆனாலும், அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மூலமே பணியில் சேர முடியும். தற்போதும், ரயில்வே தேர்வு வாரியம் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கு ஆன்லைனில் தேர்வு எழுதவேண்டும்.
சமீப காலமாக ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் டிராக்மேன், கீ மேன் போன்ற குரூப் ‘டி’ பிரி வு பணியாளர்கள் தேர்வில் வடமாநில இளைஞர்கள், பெண்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்துக்குப் பணிக்கு வரும் வடமாநிலத்தவருக்கு மொழி சிக்கலும் உள்ளது.
சில மாதத்திற்கு முன், மதுரை ரயில்வே கோட்டத்திலுள்ள குரூப்-டி பிரிவுக்கு மின் ஊழியர், சிக்னல் பராமரிப்பு, கேட் கீப்பர் போன்ற பணியிடங்களுக்கு 2018 நவம்பர், டிசம்பரில் ஆன்லைன் தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. 624 பேரில் 85 சதவீதம் பேர் வடமாநில இளைஞர்கள். 10 சதவீதத்தினர் மட்டுமே தமிழக இளைஞர்கள்.
திருச்சி கோட்டத்தில் 1,765 தொழில் பழகுநருக்கான காலியிடங்களை நிரப்பியபோது, 1,600 பேர் வட மாநிலங்களில் இருந்து தேர்வாகினர். ஏற்கெனவே இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த தேர்வு முறை தற்போது அந்தந்த பிராந்திய மொழியிலும் நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளது.
தமிழில் தேர்வு இருந்தும் தமிழக இளைஞர்கள் எண்ணிக்கை குறைவு என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு துறைகளுக்கான பிற போட்டி தேர்வைவிட, ரயில்வே தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு ஆர்வம் குறைகிறதோ என, தமிழக ரயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர்.
டிஆர்இயூ தொழிற்சங்க மதுரை கோட்ட தலைவர் சங்கர நாராயணன், "தற்போது, அந்தந்த மாநில மொழியிலும் ரயில்வே பணிக்குத் தேர்வெழுதலாம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில இளைஞர்களும், கேரளா பகுதி இளைஞர்களும் அதிகமாக ரயில்வே பணிக்கான தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக வடமாநில பழங்குடி இனத்தவர்களும் கூடுதலாகவே பங்கேற்கின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த ஐஐடி, பல் மருத்துவம் படித்தவர்களும் குரூப் –டி பணியில் சேர்ந்துள்ளனர்.
தனியாரைவிட அரசு பணிக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. அவர்களின் கல்வி முறையிலும் போட்டித்தேர்வுக்கான திட்டம் இடம்பெறுகிறது. தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பயிற்சி நிலையங்களும் வடமாநிலங்களில் அதிகமாக செயல்படுகின்றன.
ஆனால், தமிழக இளைஞர்கள் முனைப்பு காட்டுவதில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ரயில்வே தேர்வு வாரியத்துக்குத் தருவதில்லை என்றே தோன்றுகிறது.
இதிலும், தீவிரம் காட்டினால் அதிகமானோர் தேர்வாகலாம். ஆன்லைனில் தேர்வு என்பதால் முறைகேடுக்கு வாய்ப்பில்லை. மத்திய அரசு பணிக்கான பயிற்சி மையம் தேவை. ஆர்வத் துடன் தயாராகி தேர்வை எதிர் கொண்டால் ரயில்வே பணிகளில் கூடுதல் சதவீதம் இடம்பெறலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT