Last Updated : 23 Sep, 2019 04:41 PM

 

Published : 23 Sep 2019 04:41 PM
Last Updated : 23 Sep 2019 04:41 PM

விருதுநகர் எம்.பி.க்கு எதிராக அவதூறு பேச்சு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக எம்எல்ஏ., மீது காங்கிரஸார் போலீஸில் புகார்

சாத்தூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை அவதூறாகப் பேசியதைக் கண்டிக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் அதிமுக சார்பில் கடந்த 21-ம் தேதி மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், தளவாய் பாண்டியன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் சாத்தூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) புகார் அளித்தனர்.

அதில், "நாட்டின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும், பொதுமக்கள் நலனையும் பேணிக்காப்பேன் என்று உறுதிமொழியேற்று அமைச்சர் பொறுப்பேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி, பொதுக் கூட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தகாத வார்த்தையாலும், அவர் ஓட்டுக் கேட்டுவந்தால் தாக்குங்கள் என்றும், நன்றிகெட்டவர் என்றும், ரப்பர் குண்டை வைத்து அவருடைய வயிற்றில் துப்பாக்கியால் சுடுங்கள் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

அதோடு, பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரை கொலை செய்யத் தூண்டியுள்ளார்.

அதே நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனும் விருதுநகர் எம்.பி.,யை மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சியை தரக்குறைவாகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தரக்குறைவாகவும் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடமும் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x