Published : 23 Sep 2019 11:09 AM
Last Updated : 23 Sep 2019 11:09 AM
சென்னை
பேனர் விபத்தால் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் ஆறுதல் கூறினார்.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது, அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்படிருந்த பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். சுபஸ்ரீயின்மரணம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ இல்லத்துக்கு நேற்று (செப்.22) சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், "சுபஸ்ரீ மரணத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தேமுதிக பின்பற்றும். அண்மையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் பேனர் வைக்கவில்லை.
சுபஸ்ரீயின் இறப்பு மிகப்பெரிய இழப்பு. சுபஸ்ரீ இறந்து மற்றவர்களின் கண்களைத் திறந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய மரணத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். காவல்துறையும் அரசும், இதில் தொடர்புடையவர்களைத் தங்களுக்கு வேண்டியவர்கள் என்று பார்க்காமல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்க வேண்டும். தன் மகளை இழந்திருக்கின்றனர். தவறு என்றால் தட்டிக்கேட்க வேண்டும் என, தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்," என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT