Published : 21 Sep 2019 01:08 PM
Last Updated : 21 Sep 2019 01:08 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோயில் நடை இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுப்ரபாத பூஜையுடன் திறக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் சந்நிதிக்கு வருவது வழக்கம்.
ஏழைகளின் திருப்பதி என்றும் தென் திருப்பதி எனவும் அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் சன்னதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை சுப்ரபாத பூஜையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்தனர். நடை திறந்தவுடன் கோவிந்தா கோபாலா என்று கோஷங்களை எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் தென்மாவட்டங்களில் பல ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, கழிப்பிட வசதி மற்றும் பக்தர்கள் ஏறுவதற்கு தனியாகவும் இறங்குவதற்கு தனியாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள் பல பகுதிகளிலிருந்தும் இயக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பலர் ஸ்ரீருவில்லிபுத்தூரில் இருந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் நடை பயணமாகவே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீனிவாசப் பெருமாள் சன்னதிக்குச் சென்றனர் மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் அன்னதான, குடிநீர், இனிப்புகள் வழங்கப்பட்டன.
புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு அதிகாலையிலேயே சிறப்புப் பூஜைகளும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்று சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் கூட்டத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கோயில் வளாகத்தில் 30 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
பிக்பாக்கெட் திருடர்களைக் கண்காணிக்க சாதாரண உடைகளில் போலீஸார் பக்தர்களோடு பக்தராக கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் கோயில் அமைந்துள்ள பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. புரட்டாசி முதல் சனி வாரத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT