Published : 02 Jul 2015 08:37 AM
Last Updated : 02 Jul 2015 08:37 AM

யாருடைய மனதும் நோகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் நபிகள் நாயகம்: இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் ஜெயலலிதா தகவல்

யாருடைய மனதும் நோகக் கூடாது, யாரையும் குறைத்துப் பேசக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் நபிகள் பெருமகனார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலை வருமான அ.தமிழ்மகன் உசேன் வரவேற்புரை ஆற்றினர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சன்னி பிரிவு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகமது மெஹடிகான், அண்ணா சாலை தர்கா அறங்காவலர் ஹாஜி சையத் மொய்னுதீன், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி, ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழ ரசன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடல்நிலை சரியில்லாததால் இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலி தாவின் உரையை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் கூறியிருப்பதாவது:

திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை.

தினமும் ஐந்து முறை இறை வழிபாடு மேற்கொள்ளும் இஸ் லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தில் நோன்புடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைவதற்கான ஒரு பயிற்சிதான் நோன்பு.

இறைத் தூதர் நபிகள் பெரும கனார் துன்பத்தை தனதாக்கிக் கொண்டு, இன்பத்தை மட்டுமே பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பரவசப்பட்டவர். யாருடைய மனதும் நோகக் கூடாது, யாரையும் குறைத்துப் பேசக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தவர் நபிகள் பெருமகனார். நபிகள் நாயகம் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் அனை வருக்கும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x