Published : 17 Jul 2015 11:14 AM
Last Updated : 17 Jul 2015 11:14 AM

நல்லிணக்கத்தைக் கட்டிக் காப்போம்: வைகோ ரம்ஜான் வாழ்த்து

சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

ஸல்லால்லாஹூ அலைஹூவ ஸல்லம் அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் இSலாமியப் பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர்.

அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். ஆனால், இந்த நாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்க்கவும், வகுப்புத் துவேசத்தை வளர்க்கவும், அக்கறை உள்ள சக்திகள் திட்டமிட்டு அதிகார பலத்துடன் முயன்று வருவது மிகவும் அபாயகரமானது. இந்நிலையில், சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x