Published : 19 Sep 2019 05:46 PM
Last Updated : 19 Sep 2019 05:46 PM
தூத்துக்குடி
குற்றங்களைத் தடுக்க போலீஸ் - பொதுமக்கள் இடையே நல்லுறவுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது அதே சராசரி அளவில்தான் உள்ளது. பொதுவாக தென் மாவட்டங்களில் பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை கட்டுப்படுத்துவதற்கும், உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் குண்டர் சட்டம் மற்றும் பாலியல் குற்றவாளிகள் போக்சோ சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் விதமாக மாவட்டக் காவல்துறை தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பழக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் கஞ்சா மூட்டைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பழக்கத்திற்கு பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் அடிமையாக்கப்படுகின்றனர். ஆகவே, பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த மனநல ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக போட்டிகள், கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் நிச்சயம் நடத்தப்படும்'' என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ''தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சேலைகள், முகூர்த்தப் பட்டுகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன், படுக்கை விரிப்புகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், வேஷ்டிகள், கைலிகள் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன. தூத்துக்குடி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ. 3 கோடியே 15 லட்சம் ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT