Last Updated : 19 Sep, 2019 05:27 PM

 

Published : 19 Sep 2019 05:27 PM
Last Updated : 19 Sep 2019 05:27 PM

மானாமதுரையில் வன்முறைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய வங்கி காவலாளிக்கு சிவகங்கை எஸ்.பி. பாராட்டுச் சான்றிதழ்

வங்கிக் காவலாளி செல்லநேருவைப் பாராட்டி டிஐஜி ரூபேஷ்குமார் மீனா சான்று வழங்கினார்

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜமீனில் வெளிவந்தவரை வெட்டிய வன்முறை கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய வங்கி காவலாளிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டு குவிகிறது.

மேலும் காவலாளியைப் பாராட்டி, செல்லநேருவை பாராட்டி சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

மானாமதுரை அமமுக ஒன்றியச் செயலாளர் சரவணனை ஒரு கும்பல் முன்விரோதத்தில் கடந்த மே 23-ம் தேதி வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் தங்கராஜ், அவரது அண்ணன் தங்கமணி (40) உட்பட 7 பேரை மானாமதுரை போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த தங்கமணி நேற்று (செப்.18) மரக்கடை பஸ் நிறுத்தம் கனரா வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை கொலையான சரவணனின் உறவினரான பிச்சப்பனேந்தல் தமிழ்ச்செல்வம் மற்றும் ஆவரங்காடு மச்சக்காளை, சலப்பனேந்தல் பூமிநாதன், தங்கராஜ் ஆகியோர் வழிமறித்து வெட்ட முயற்சித்தனர்.

அவர்களைத் தடுத்த திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கணேஷ்நாத்தை வெட்டிவிட்டு தங்கமணியை விரட்டினர். தப்பிப்பதற்காக கனரா வங்கிக்குள் ஓடிய தங்கமணியை, அவர்கள் விரட்டி வெட்டினர்.

இதையடுத்து வங்கிக் காவலாளி மழவராயனேந்தலைச் சேர்ந்த செல்லநேரு (48) அரிவாள் வைத்திருந்த கும்பலை நோக்கிச் சுட்டார். இதில் குண்டடிபட்டு தமிழ்ச்செல்வம் காயமடைந்தார். மற்ற மூவரும் தப்பியோடினர். இதுகுறித்து மானாமதுரை நகர் போலீஸ் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பூமிநாதனை கைது செய்தனர்.

காவலாளிக்கு பாராட்டு:

இந்நிலையில், வன்முறை கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய வங்கி காவலாளி செல்லநேருவை பாராட்டி சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதன் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழை ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா வழங்கினார்.

மேலும் வீரதீரமாக செயல்பட்ட காவலாளிக்கு போலீஸார் மட்டுமின்றி வங்கி ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

காவலாளி செல்லநேருவுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்று

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x