Published : 19 Sep 2019 04:44 PM
Last Updated : 19 Sep 2019 04:44 PM

இ - சிகரெட்டும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்!

உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் 26.8 கோடி மக்களுடன் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இதற்கிடையே இ-சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விற்பனை, சேமித்து வைத்தல், விளம்பரம் உள்ளிட்ட இ-சிகரெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இ-சிகரெட் தடைக்குப் பின்னரே இ- சிகரெட்டுகள் குறித்தும் அதன் அசாத்தியப் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியவந்தன.

இ- சிகரெட் என்றால் என்ன?

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அவற்றில் முக்கியமானது சிகரெட். ஆனால் சிகரெட்டைப் போல நெருப்பு கிடையாது. சாம்பல், புகை வெளியே வராது. துர்நாற்றம் வீசாது. கேடு விளைவிக்காது, புகைப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் என்று கவர்ச்சிகரமான வார்த்தைகள் மூலம் இ-சிகரெட் விற்பனை தொடங்கியது.

பெரும்பாலும் வழக்கமான சிகரெட் போன்ற வடிவத்திலேயே இருக்கும் இ- சிகரெட், இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு பகுதியில் திரவ வடிவிலான நிகோடினும் மறு பகுதியில் பேட்டரியும் இருக்கும். பேட்டரியில் உள்ள பொத்தானை அழுத்தும்போது திரவ நிகோடின், ஆவி நிலைக்கு மாறி பயன்படுத்துபவரின் தொண்டைக்குள் இறங்கும். இ-சிகரெட்டைப் பயன்படுத்துபவர் நிகோடின் புகையை உள்ளிழுத்து வெளியே விடுவதால் புகை பிடிக்கும்போது ஏற்படும் அதே உணர்வை இதிலும் பெறுவார். இந்த நிலை வேப்பிங் (Vaping) என்று அழைக்கப்படுகிறது.

இ-சிகரெட்டில் உள்ள நிகோடின், இ-திரவம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நிகோடின் உடன், புரொப்பலின் கிளைகால், கிளிசரின், கன உலோகங்கள், சுவையூட்டிகள் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும். இவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இ-திரவம் பயனாளிகளின் தேவைக்கேற்ப சாக்லேட், பழங்கள், காபி சுவைகளில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இ- சிகரெட் வரலாறு

இ- சிகரெட்டுகள் என்று அழைக்கப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பிறப்பிடம் சீனா. மற்ற நாடுகளும் இதைத் தயாரித்தாலும் சீனாவே முன்னணியில் இருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே இ- சிகரெட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹான் லீ என்னும் சீன மருந்தாளுநரே 2003-ம் ஆண்டு முதன்முதலில் நவீன எலட்ரானிக் சிகரெட்டைக் கண்டுபிடித்தார். 2004-ல் இவ்வகை சிகரெட்டுகள், சீனச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளை நோக்கித் தள்ளியது. அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தின் மூலமே ஆரம்பத்தில் இவ்வகை சிகரெட்டுகள் இயங்கின. பின்னாட்களில்தான் பேட்டரி மூலம் சூடாக்கும் இ-சிகரெட்டுகள் அறிமுகமாகின.

வித்தியாச வடிவங்களில்...

பேனா, குழல், சிகரெட், பென் டிரைவ் என பல்வேறு வடிவங்களில் இ-சிகரெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இவை ஆன்லைனிலும் விற்பனையாகின்றன. இ-சிகரெட் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து 2014-ல் உலக சுகாதார நிறுவனம், ஆய்வறிக்கையை அளித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. இ-சிகரெட்டின் ஆபத்து குறித்து தெரியவந்த பிறகே, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அவற்றைத் தடை செய்தன. இந்தியாவிலும் இதற்கு 16 மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா அதற்கு முழுமையாகத் தடை விதித்துள்ளது. இதன்படி முதல்முறை இ- சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதமும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இ- சிகரெட் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து விளக்கமாகச் சொல்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வசந்தாமணி.

டீன் வசந்தாமணி

என்ன பாதிப்பு?

''தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஏற்ற வகையில், இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மாறும். வழக்கமான சிகரெட்டுகளைக் காட்டிலும் இதில் நச்சு குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அதில் பயன்படுத்தப்படும் காரியம், கார்பனைல் சேர்மங்கள் ஆகியவற்றால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும். உடனடி விளைவாக போதை உணர்வும் உடல் செயல்பாட்டில் பாதிப்பு, நுரையீரலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.

இ-சிகரெட்டால் வெளியாகும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், ஃபார்மிக் அமிலம், ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றால் அதிக ஆபத்து உண்டு. தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு வலி, தலைவலி, தொண்டையில் எரிச்சல், அரிப்பு, நுரையீரல் புண், வீக்கம், இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் பேட்டரி சூடாகி, சில நேரங்களில் வெடிக்கவும் வாய்ப்புண்டு.

இ-சிகரெட்டால் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், கட்டாயம் பாதிப்பு இருக்கும். இ-சிகரெட்டைப் பயன்படுத்தும் பெண்களுக்கு, ஆண்களுக்கு வரும் அத்தனை ஆபத்துகளும் வரும். கூடுதலாக குழந்தைப் பிறப்பில் பிரச்சினை, கருத்தடையில் கோளாறு ஆகியவை ஏற்படலாம்'' என்கிறார் மருத்துவர் வசந்தாமணி.

புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாக இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 12.4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் புகையிலை, பீடி, சிகரெட், இ-சிகரெட் என எந்த வடிவத்தில் விற்பனையாகும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் செய்யும் பேருதவியாக இருக்கும்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x