Last Updated : 24 Jul, 2015 06:56 PM

 

Published : 24 Jul 2015 06:56 PM
Last Updated : 24 Jul 2015 06:56 PM

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்குமா ‘பொருள் விளக்க மையம்’?

கோவை குற்றாலத்தில், இயற்கை பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பொருள் விளக்க மையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

கோவையில் பெரிதாக பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் விடுமுறை நாட்களில் மக்கள் திரளும் இடமாக இருப்பது சுற்றுலா தலமான கோவை குற்றாலம். வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கோவை வழியாகச் செல்லும் சுற்றுலா பயணிகள், கோவை குற்றாலம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கோவை குற்றாலத்துக்குள் வனத்துறை சோதனைச்சாவடி அனுமதிக்கும் பகுதியில் பொருள் விளக்க மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இயற்கை வளங்கள், விலங்குகள் குறித்த படக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுத்தை, யானை உள்ளிட்ட மிருகங்களை ‘பாடம்’ செய்தும் காட்சிக்கு வைத்துள்ளனர். இது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளிக்க வனத்துறை சார்பில் ஊழியர்களும் உள்ளனர்.

அருவிக்கு வருபவர்கள் பெரும்பாலும் இந்த பொருள் விளக்க மையத்துக்குச் செல்வதாகத் தெரியவில்லை. இந்த மையம் திறந்து வைப்பதும் அரிதாகவே இருக்கிறது. மையம் திறந்திருந்தாலும், இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து விளக்களிக்க ஊழியர்களை காண்பதும் அரிதாக உள்ளது என்று கூறுகின்றனர் சுற்றுலா பயணிகள்.

இந்த மையத்தில் எண்கள் பதியப்பட்டு, பொத்தான்கள் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கருவி உள்ளது. அந்த கருவிக்கு எதிரே சுவரில் யானை, புலி, சிறுத்தை, குயில், மயில், ஆந்தை என பல்வேறு விலங்குகள், பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கருவியில், ஒரு குறிப்பிட்ட எண் உள்ள பொத்தானை அழுத்தினால், எதிரே சுவரில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணில் உள்ள விலங்கு அல்லது பறவையில் இருந்து மின் விளக்கு எரியும். அப்போது, அந்த விலங்கு அல்லது பறவை அதற்குரிய சத்தத்தை எழுப்பும்.

உதாரணமாக எண் ஒன்றில் யானை இருந்தால், அந்த பொத்தானை அழுத்தும்போது யானை பிளிறும். இந்த தானியங்கி கருவி பழுதுபட்டுள்ளதால், மையத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல், வெறிச்சோடிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, இங்குள்ள ஊழியர்கள் கூறும்போது, ‘இந்த மையத்துக்கு ஒரு பொறுப்பாளர் உள்ளார். அவர் வெளியில் செல்லும்போது, நாங்கள் யாராவது ஒருவர் கவனிப்போம். ஒரு மாதம் முன்புதான் மிருகங்கள், பறவைகள் சப்தம் எழுப்பும் இந்த இயந்திரத்தை சரி செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். இன்னும் சில நாட்களில் சரிசெய்து தருகிறோம் என்று சொல்லிச் சென்றார்கள். ஆனால், இன்னமும் வரவில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை இதை இந்த மையத்தை திறந்துதான் வைக்கிறோம். வருகிறவர்கள் பெரும்பாலும் நேரே அருவிக்கு போவதிலேயே விருப்பம் காட்டுகின்றனர். இருந்தாலும், இயற்கை மீது நேசம் உள்ளவர்கள் இங்கே வரத்தான் செய்கிறார்கள்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x