Published : 18 Sep 2019 04:53 PM
Last Updated : 18 Sep 2019 04:53 PM
மதுரை
நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேக உணவு வகைகள் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரயில்வே பொது மேலாளர் ஒப்புதல் வழங்கியதாக தென்னக ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய தென்னக ரயில் பயணிகள் சங்கப் பொதுச் செயலர் பத்மநாதன், "சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை மனுவை முன்வைத்தோம்.
இந்தியாவில் தினமும் சுமார் 2 கோடிக்கும் மேலான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயில்வேயின் முதலீட்டாளர்களே பயணிகள்தான்.
நீண்ட தூரம் பயணிக்கும் சர்க்கரை நோயாளி உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் ரயில் நிலைய பிளாட்பார அரங்குகள், ரயில்களில் கிடைக்கும் உணவுகளை வேறு வழியின்றி சாப்பிடுகின்றனர்.
இது போன்ற காரணத்தால் நோயின் வீரியம் அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர். இச்சூழலில் சர்க்கரை நோயாளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கு ஏற்ப மருத்துவரீதியில் வரையறுக்கப்பட்ட உணவை ஓடும் ரயில்களில் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தோம்.
இக்கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.
இந்த ஒப்புதலையடுத்து அதிகாரிகள், ரயில்வே சுற்றுலா கழகம் இணைந்து இத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பத்மநாதன் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இத்திட்டம் பற்றி எவ்வித உத்தரவும் இன்னும் வரவில்லை. அப்படியே வந்தால் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
என்னென்ன உணவு வகைகள்?
ரயில் பயணிகளுக்கு கோதுமை, உப்புமா, கோதுமை சப்பாத்தி, நவதானிய தோசைகள், மட்டை அரிசியில் தயாரித்த உணவு வகை, முருங்கைகீரை, நூக்கல் சூப் வழங்கவேண்டும்.
நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகள் ரயில் நிலைங்களில் எளிதில் கிடைக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3 நாளுக்கு மேல் ரயிலில் தொடர்ந்து பயணிக்கும் சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையின் அளவை கண்டறிய பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தென்னக ரயில் பயணிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT