Last Updated : 18 Sep, 2019 02:27 PM

 

Published : 18 Sep 2019 02:27 PM
Last Updated : 18 Sep 2019 02:27 PM

அழகர்கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?- 10 ஆண்டுகளாக நீர் நிரம்பாததால் பக்தர்கள் வேதனை

படங்கள்: த.இளங்கோவன்.

மதுரை

அழகர்கோவில் அருகிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தைச் சீரமைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் பொய்கைக்கரைப்பட்டியில் மன்னர் திருமலை நாயக்கரால் 500 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று இங்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இத்தெப்பத்தில் தண்ணீர் நிரம்பாததால் தெப்பத்தின் கரையைச் சுற்றி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அழகர்மலையில் பெய்யும் மழைநீர் கால்வாய்கள் மூலம் வந்தடையும் வகையில் இத்தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. தெப்பத்தை சுற்றி நிழல் தரும் மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நிழலில் அமர்ந்து திருவிழாவை ரசிக்கும் பக்தர்கள் மாலை வரை அங்கு தங்கி பெருமாளை தரிசித்துச் செல்வர். ஆனால், தற்போது அதுபோன்று மரங்கள் ஏதும் இல்லை. வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வருவதில்லை.

மதுரை மாவட்டத்திலுள்ள பெரிய தெப்பக்குளங்களில் ஒன்றான இது உரிய பராமரிப்பின்றி உள்ளதால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்குளத்தின் நடுவிலுள்ள மைய மண்டபமும் இடியும் நிலையில் உள்ளது. மைய மண்டபம் மேலும் சிதிலமடைவதைத் தடுக்கும் வகையில் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தெப்பத்தில் மீண்டும் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பையும் பெறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்த முருகன் கூறியதாவது: மதுரையின் வரலாற்று அடையாளங்களின் ஒன்றான பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீரின்றி காய்ந்துபோய் உள்ளது. மேலும் தெப்பக்குளத்தின் கரைகள், படிக்கட்டுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இக்குளத்தை கோயில் நிர்வாகம் முறையாகப் பராமரிப்பதில்லை. வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் போதுமான தண்ணீர் வருவதில்லை. ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட இத்தெப்பத்தில் தற்போது ஒரு சொட்டு தண்ணீரைக்கூட காண முடியாதது வேதனையாக உள்ளது.

மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் இதுபோன்ற தெப்பக்குளங்களையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

தொல்லியல் துறையால் தாமதம்
-
சுந்தரராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் அனிதாவிடம் கேட்டபோது “பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபம் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதிலமடைந்துள்ள மைய மண்டபத்தைச் சீரமைத்துப் புதுப்பிக்க அனுமதி கேட்டு தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் முதலில் மைய மண்டபத்தைச் சீரமைத்துவிட்டு, அதன்பின் இத்தெப்பக்குளத்தையும், மழைநீர் வரத்துக் கால்வாய்களையும் சீரமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் தண்ணீர் தேக்கினால் மைய மண்டபம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. தொல்லியல் துறையின் ஒப்புதல் கிடைக்காததால்தான் பொய்கைகரைப்பட்டி தெப்பத்தின் சீரமைப்புப் பணி தாமதமாகி வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x