Published : 18 Sep 2019 11:48 AM
Last Updated : 18 Sep 2019 11:48 AM
சென்னை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார். இதன்காரணமாக, அவரது அமர்வில் வழக்குகள் இதுவரை பட்டியலிடப்படவில்லை. தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமற்றம் செய்ததற்கு தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று (செப்.18), தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது குடியரசு தலைவர் இதுவரை முடிவெடுக்காத நிலையில் கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.
அப்போது, நீதிபதிகள், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தஹில் ரமானியை இடமாற்றம் செய்து கொலீஜியத்தில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது நிர்வாக உத்தரவு என்பதால் உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என வழக்கறிஞர் பிரபாகர் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, மனு பட்டியலிட்ட பின் வழக்கு விசாரணைக்கு உகந்ததா எனபது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT