Published : 17 Sep 2019 06:10 PM
Last Updated : 17 Sep 2019 06:10 PM
சென்னை
பெரியார் புகழ் ஓங்குக என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளார்.
பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பெரியார் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும், பலரும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் பெரியாரை நினைவுகூர்ந்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில், "பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்! பெரியார் புகழ் ஓங்குக," என பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், அவ்வப்போது தமிழில் பதிவிட்டு வருகிறார். கேரள வெள்ளத்தின்போது தமிழக மக்களை உதவக் கோரியும், நிவாரண பொருட்களை அனுப்பியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் பல்வேறு சமயங்களில் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT