Published : 16 Sep 2019 05:44 PM
Last Updated : 16 Sep 2019 05:44 PM
மதுரை
நோயாளிகளுக்கு என்ன வகையான நுரையீரல்புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் ‘கிரையோ பயாப்ஸி’ என்ற கருவி தமிழகத்திலே முதல் முறையாக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிரையோ பயாப்சி என்பது நுரையீரல் புற்று நோயை சரியாக கண்டறிய செய்யப்படும் திசு எடுக்கும் முறை மருத்துவ தொழில்நுட்பம்.
பிரன்ங்கோஸ்பி எனப்படும் சுவாசக்குழாய் உள் நோக்கும் கருவி மூலம் -5 லிருந்து -14 டிகிரி வரையிலான அளவிற்கு குறைந்த குளிர்ச்சியை உண்டாக்கி செய்யப்படும் இந்த திசுப்பரிசோதனை முறைதான் ‘கிரையோ பயாப்ஸி’ என்று அழைக்கப்படுகிறது.
இது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் உதவியால் மிகக்குறைந்த குளிர் நிலையை திசுப்பரிசோதனை செய்யும் மெல்லிய குழாயின் முனையில் உருவாக்குகிறது. அதனை சுவாசக்குழாயில் உருவாகியுள்ள திசுக்கட்டியில் மேல் தொட்டு அதனையும் 0.5 முதல் 1 செ.மீ அளவிலான பனிக்கட்டியாக குளிரச்செய்து பரிசோதனைக்கு திசு எடுக்கப்படுகிறது.
சாதாரண முறையில் செய்யப்படும் பாயாப்சி முறையில் நுரையீரல் கட்டி எந்தவகையானது என்பது 75 சதவீதம் மட்டுமே சரியான முறையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரண்டாம் முறையும் திரும்ப செய்யவேண்டியுள்ளது. ஆனால் ‘கிரையோ பயாப்சி’ முறையில் 97 சதவீதம் என்ன வகையான புற்றுநோய் என்பதை சரியாகக் கணிக்கப்படுவதால், நோயாளியின் சிரமம் குறைகிறது.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் வனிதா நுரையீரல் சிகிச்சைப்பிரிவில் இந்த‘கிரையோ பயாப்ஸி’ புற்றுநோய் கண்டறியும் கருவியை தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், ‘‘எந்த வகை புற்றுநோய் என்பதை கண்டுபிடிக்க உதவும் இந்த ‘கிரயோ பாயாப்சி’ கருவி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவில்தான் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கருவி ரூ. 20 லட்சம் மதிப்புள்ளது. இந்த சாதனம் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பிட்டு திட்டம் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் மதுரை மாவட்ட கலெக்டரின் தன்னிறைவு திட்டத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT