Published : 13 Sep 2019 11:45 AM
Last Updated : 13 Sep 2019 11:45 AM
சிவகங்கை,
சிவகங்கை அருகே ஜீவ சமாதி அடையப் போவதாக 80 வயது 'சாமியார்' நாடகமாடியதால் விடிய, விடிய காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிவகங்கை அருகே பாசாங்கரையைச் சேர்ந்தவர் இருளப்பசுவாமி (80). இவர் ஓராண்டுக்கு மேலாக ஜீவசமாதி அடையப் போவதாக கூறி வந்தார். இந்நிலையில் செப்.13-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இது குறித்த வால்போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரவியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாசாங்கரையில் குவிந்தனர். நேற்று காலை முதல் ஜீவசமாதிக்கான பணிகள் தொடங்கின.
இருளப்பசாமி கூறிய இடத்தில்10 அடி நீளம் 10 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கட்டடம் கட்ட செங்கல், ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் அருகிலேயே சாமியான பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி அளித்து வந்தார்.
மாலை முதல் நிமிடத்திற்கு நிமிடம் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 11:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆசி பெற்றதோடு அங்கையே அமர்ந்தார். இரவு 12 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆனந்தராஜ் தலைமையிலான குழுவினர் இருளப்பசமியான் உடல் நிலையை பரிசோதனை செய்து வந்தனர்.
தொடர்ந்து சிவகோசங்களும், தேவாரப் பாடல்களும் பாடப்பட்டு வந்தது. மவுனமாக இருந்த அவர், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பக்தர்களுக்கு எழுந்து அருளாசி வழங்கினார். ஏதாவது சாப்பிட்டு தந்கொலைக்கு முயலாதபடி காவல்துறையினர் அருகிலேயே அமர்ந்து கண்காணித்து வந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் பரவசத்துடன் காத்திருந்தனர்.
இரவு 2 மணிக்கு மேல் இருளப்பசாமி ஜீவ சமாதி அடையும் நேரம் வந்துவிட்டது எனக் கூறி கொண்டே இருந்தார். அதிகாலை 3 மணிக்கு "நான் தியானத்தில் இருக்கும் போது பெண்கள் விளக்கேற்ற வேண்டுமென தெரித்தார் "இதையடுத்து அவர் தியானத்தில் ஈடுபட்டபோது, பெண்கள் விளக்கேற்றினர்.
இறுதியாக காலை 5 மணிக்கு அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் நாடிதுடிப்பு, ரத்த அழுத்தம் ஒரே சீராக இருப்பதாகக் கூறினர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நிர்ணயிக்க பட்ட நேரம் முடிந்துவிட்டது வேறொரு நாளில் ஜீவ சமாதி அடைவேன் என இருளப்பசாமி கூறினார். இதையடுத்து கூட்டத்தை கலைந்து போக போலீஸார் வலியுறுத்தினர்.
ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் ஏமாற்றியதால், அவரை நம்பி வந்து விடிய, விடிய காத்திருந்த பக்தர்கள் முகம் சுளித்தபடி வெளியேறினர். போலீஸார் சாமியாரை பத்தரமாக வீட்டுக்கு வேனில் அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அசம்பாவித சம்பவம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கேயே இருந்தேன். இருளப்பசாமி சொன்ன நேரம் முடிந்ததால் இன்னொரு நாளில் ஜீவ சமாதி அடைவதாக தெரிவித்துள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT