Published : 17 Jul 2015 09:40 AM
Last Updated : 17 Jul 2015 09:40 AM

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு - 20-ம் தேதி விசாரணை

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப் பட்டது.

சிபிஐ வழக்குப் பதிவு

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்பு களையும் முறைகேடாகப் பயன் படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி ஆஜராகும்படி தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தயாநிதி மாறன் மனுதாக்கல்

அதைத்தொடர்ந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘இவ்வழக்கில் 2011-ம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபரில் சிபிஐ சம்மன் அனுப்பியது. நான் ஒரு அப்பாவி என சிபிஐ அதிகாரிகளுக்கு பல தடவை கடிதம் எழுதினேன். இவ்வழக்கில், இதுவரை 60 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இவ்வழக்கில் என்னை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்து கின்றனர். என் மீதான குற்றச் சாட்டுகள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றது. இவ்வழக்கில் என்னைக் கைது செய்வதே சிபிஐயின் நோக்கமாக இருக் கிறது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இடைக்கால முன்ஜாமீன்

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா இம்மனுவை விசாரித்து, “மனுதாரருக்கு 6 வாரம் இடைக்கால முன் ஜாமீன் அளிப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் வழக்கு விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்காவிட்டால், சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு தயாநிதி மாறன் முழுமையாக ஒத்துழைக்காததால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. வரும் திங்கள்கிழமை இம்மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x