Published : 11 Sep 2019 12:20 PM
Last Updated : 11 Sep 2019 12:20 PM
ராமநாதபுரம்,
இந்தியப் பொருளாதாரம் 5% சரிவடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தீண்டாமை ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரனின் 62-வது நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி, ராமராதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று காலை இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், "தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தன் உயிரை இழந்த இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது பெருமைக்குரியது.
1950-ல் விடுதலை இயக்கத்தைக் கண்டவர் இம்மானுவேல் சேகரன். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி வெற்றி கண்டவர். அவரின் புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும். அவரின் நினைவிடத்தில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறது" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் அரசு விழாவாக அறிவிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இதை நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்" என்றார்.
உடனே, திமுக ஆட்சிக்கு வந்தால் அறிவிப்பீர்களா என நிருபர்கள் கேட்க, "அடுத்து நிச்சயம் திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் 5% சரிவடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை எனக் கூறிச் சென்றார். அவருடன் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT