Published : 10 Sep 2019 10:08 PM
Last Updated : 10 Sep 2019 10:08 PM

தமிழகத்துக்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த வழக்கறிஞர்: ஆய்வுக்காக திருமணத்தைத் தள்ளி வைத்தவருக்கு புதன்கிழமை திருமணம்

சென்னை

தமிழகத்தின் பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீடு பெற்றுத் தரப் போராடி இதுவரை 19 பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீட்டை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பெற்றுத் தந்துள்ளார். இதற்காக தனது திருமணத்தையே ஒத்திவைத்திருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வாங்கிய கையுடன் புதன்கிழமை திருமணம் செய்கிறார்.

இந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம், புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் பாரம்பரியப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தனி மனிதராக ஒரு வழக்கறிஞர் தமிழகத்தின் பாரம்பரியப் பொருட்களுக்காக கடந்த 19 ஆண்டுகளாக தனது உழைப்பைச் செலுத்தி 19 பொருட்களுக்கு தனி மனிதராக புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தந்துள்ளார்.

இதன்மீதுள்ள ஆர்வம் காரணமாக அவர் திருமணம் செய்யும் எண்ணமே இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் சமீபத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்த அவர் தனது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை நாளை (11-09- 2019) மணக்கிறார். அவரது திருமணம் நாளை நடக்க உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்த இனிப்பான தருணத்தில் இல்வாழ்க்கையை நாளை (11 செப்) தொடங்க உள்ள வழக்கறிஞர் சஞ்சய் காந்தியிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் பேசியபோது அவர் கூறியதாவது:

19 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளீர்கள். இந்த சிந்தனை எப்படி வந்தது?

இந்தச் சட்டம் 1999-ல் உருவானபோது நான் வழக்கறிஞரானேன். அப்போது உருவான சட்டத்தைப் பற்றி அறிந்தபோதே நான் இந்தச் சட்டத்துக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன். 2002-ல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உடனடியாக காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்காக விண்ணப்பித்தேன்.

முதன்முதலில் பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தபோது அந்த மக்கள் அடைந்த சந்தோஷத்தை அளவிடவே முடியாது. அங்கு 21 சொசைட்டிகள் உள்ளன. அது அனைவருக்கும் பயனாக அமைந்தது.

புவிசார் குறியீடு கிடைப்பதால் என்ன பயன்?

புவிசார் குறியீடு கிடைத்த பின் பயன் அதிகம், வளர்ச்சியே அதிகம் கிடைக்கும். அந்தப் பொருளுக்கான பெயரை வெளியாட்கள் யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அறிவுசார் சொத்துரிமை அந்த மக்களுக்கு மட்டுமே உரிமையாக இருக்கும். இதனால் போலிகள் தடுக்கப்படும். மற்றவர்கள் பயன்படுத்த தடை என்பதால் இவர்களுக்கான உற்பத்தி, தேவை அதிகரிக்கும்.

நுகர்வோர்கள் உண்மையான பொருளை வாங்கலாம். உண்மையாகத் தயாரிப்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இந்தியா முழுவதும் பிரபலம், உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் தயாரிப்பவர்கள் அதில் மவுசுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று போட்டுக்கொள்கிறார்கள். இனி அது தடுக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு என்ன தனித்தன்மை என்றால் அது பாரம்பரியமிக்கது. 1925-ல் ஆங்கிலேயர் ஒருவர் இதுகுறித்து எழுதியுள்ளார். 1940லேயே அங்கு பால்கோவாவுக்கான சொசைட்டி ஆரம்பித்து விட்டார்கள். அங்குள்ள பசுவின் பாலுக்குத் தனித்தன்மை உண்டு.

நீங்கள் 19 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். அதை வரிசைப்படுத்த முடியுமா?

காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளம், மதுரை சுங்கிடி புடவை, ஆரணிப் பட்டு, சேலம் வெண்பட்டு, கோவை போரா காட்டன், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம், நாச்சியார்குளம் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தட்டு, பத்தமடை பாய், மாமல்லபுரம் கற்சிற்பம், திருப்புவனம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்ணாடி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 16 பொருட்கள். சில வகை விட்டுப்போயிருக்கும்.

திருநெல்வேலி அல்வாவுக்கு வாங்கவில்லையா?

வாங்க முடியாது. அவர்களுக்கு சங்கம், சொசைட்டி எதுவும் இல்லை. சிலர் மட்டுமே தயாரிக்கிறார்கள். தனிப்பட்ட நபர்கள் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க முடியாது. ரெண்டு மூன்று பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் ட்ரேட் மார்க்குக்காக பிரச்சினை செய்து வாங்கியுள்ளனர்.

புவிசார் குறியீடு பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

அப்படி ஆர்வம் இருப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம். நான் எவ்விதக் கட்டணமும் இன்றி குறியீடு பெற்றுத் தரத் தயாராக இருக்கிறேன். அவர்கள் தனிப்பட்ட ஆட்களாக வர முடியாது. சங்கமாக வந்தால் உதவத் தயார். அனைத்துப் பொருட்களுக்கும் வாங்க முடியாது. அந்தப் பொருட்களுக்கு உண்மையான தனிச்சிறப்பு இருக்க வேண்டும். அது விவசாயப் பொருட்களாக, வேளாண் பொருட்களாக , கைவினை, இயற்கைப்பொருட்களாக இருக்க வேண்டும். அந்தப் பொருட்களுக்கு வரலாற்றுச் சான்று கட்டாயம் இருக்கவேண்டும்.

நீங்கள் மேலும் வேறு ஏதாவது பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்க முடிவு செய்துள்ளீர்களா?

ஆமாம். மேலும் 15 பொருட்களுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். சில பொருட்களை முடிவு செய்துள்ளேன். மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஓசூர் ரோஸ், சேலம் மாம்பழம் என ஒரு பட்டியலே இருக்கிறது.

திருமணத்தைத் தள்ளிப்போடக் காரணம் என்ன?

இதில் ஈடுபட்டதால் என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. தற்போது முழுமையான திருப்தியான மனநிலையில் இருக்கிறேன்.

உங்களுக்கு விருது எதுவும் கிடைத்துள்ளதா?

தேசிய விருது கொடுத்தார்கள், அது விருதுப்போன்றது அல்ல, அதிகமாக புவிசார் குறியீடுகளை பெற்றது யார் என தேர்வு செய்தனர். நான் அதிகமாக வாங்கியிருந்ததால் எனக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது

இத்தனை வருடத்தில் உங்களை நெகிழவைத்த சம்பவம்?

நான் புவிசார் விருது வாங்கிக்கொடுத்த மாமல்லபுரத்திற்கு சீனப் பிரதமரை நமது பிரதமர் மோடி அழைக்கிறார். சீனப் பிரதமரே ஈர்க்கப்பட்டு வருவது எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது. மாமல்லபுரம் உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒன்று. இந்தியாவில் இரண்டு விஷயங்களை பற்றிப் பேசுகிறார்கள். ஒன்று தாஜ்மஹால், மற்றது மாமல்லபுரம்.

உங்களுக்கு சஞ்சய் காந்தி என்ற பெயர் ஏன் வைத்துள்ளனர். நீங்கள் காங்கிரஸ் குடும்பமா?

எனது இயற்பெயர் செந்தில் குமார். சஞ்சய் காந்தி விபத்தில் இறந்த நினைவாக என் பெற்றோர் சஞ்சய் காந்தி என்று மாற்றிவிட்டார்கள்.

உங்கள் வருங்கால மனைவி இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவரா?

நான் இதுவரை அவரிடம் பேசியதே இல்லை. எங்கள் திருமணம் பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். இனிமேல்தான் திருமணத்துக்குப் பின் அவரிடம் பேசுவேன். (சிரிக்கிறார்)

உங்கள் திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்காக வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

இவ்வாறு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x