Published : 04 Jul 2015 10:22 AM
Last Updated : 04 Jul 2015 10:22 AM

முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் ஜெயலலிதா: விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை பீதிக்கு உள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொண்டு, பிற மாநிலங்களின் மீதும், மற்றவர்களின் மீதும் பழியைப் போடாமல், முல்லை பெரியாறு அணை பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''கேரள அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்திற்கு அநீதி இழைத்ததால், உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் தேக்கி கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

முல்லை பெரியாறு அணைக்கு செல்லுகின்ற தமிழக அதிகாரிகளை தடுப்பதாலும், அவர்களின் பணிக்கு இடையூறு செய்வதாலும் மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, முல்லை பெரியாறு அணைக்கு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதுகுறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லை பெரியாறு அணை தகர்க்கப்படும் என சொல்லியிருப்பது தமிழக வரலாற்றில் அழிக்கமுடியாத கரும் புள்ளியாகும்.

பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதைப்போல இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் என சித்தரித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அதுபோன்ற செயலில் ஈடுபடும் அமைப்பினுடைய பெயரை தமிழக அரசால் வெளியிடமுடியுமா? முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டு, விவசாயிகளின் பெயரில் பாரட்டு விழாவை நடத்திக் கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டையே கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய புலனாய்வு துறையின் ஆய்வு அறிக்கையை காரணம் காட்டி “நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு” என்பதை போல, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழர்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகமாகும்.

வெற்றிக்கு உரிமை கொண்டாடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தோல்வி என்றால் அடுத்தவர் மீது பழியை சுமத்துவார், அதே போக்கில் இதையும் செய்துள்ளார்.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியோ மத்திய புலனாய்வுத்துறையின் ஆய்வு அறிக்கையில், முல்லை பெரியாறு அணையை குறிப்பிட்டு, எந்த தீவிரவாத ஆபத்தும் இருப்பதாக சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுபோன்று மக்களை பீதிக்கு உள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொண்டு, பிற மாநிலங்களின் மீதும், மற்றவர்களின் மீதும் பழியைப் போடாமல், முல்லை பெரியாறு அணை பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என விஜயகாந்த் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x