Published : 09 Sep 2019 05:39 PM
Last Updated : 09 Sep 2019 05:39 PM
குமுளி
தென்மேற்குப் பருவமழைக் காலம் இறுதி நிலையை எட்டியுள்ளதால் கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் மழை வெகுவாய் குறைந்துள்ளது. இதனால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து ஒரேநாளில் 947 அடியாக குறைந்தது.
தென்மேற்குப் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும். இதனால் கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் மழை பெய்து முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் உயரும்.
இந்த ஆண்டிற்கான பருவமழை உரிய நேரத்தில் தொடங்கவில்லை. நீர்மட்டம் உயராததால் பெரியாறு அணையில் முதற்போக சாகுபடிக்கான நீர் திறக்கப்படவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் மகசூலை இழந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தாமதமாக மழை பெய்தது.
இருப்பினும் கனமழையாக இருந்ததால் குறுகிய நாட்களிலே நீர்மட்டம் உயர்ந்து 132 அடியை எட்டியது. பின்பு மழையும், வெயிலும் மாறி மாறி பருவநிலை சீரற்று இருந்தது.
இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு கடந்த சிலவாரங்களாக மீண்டும் மழை பெய்தது. இதனால் அதிகபட்சமாக வினாடிக்கு 3 ஆயிரத்து 207 கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டதால் வைகைஅணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை இறுதி நிலையை எட்டியுள்ளது. எனவே தற்போது கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நேற்று மழைப்பொழிவு வெகுவாய் குறைந்தது. தேக்கடியில் மட்டும் 0.4 மிமீ. மழைப்பதிவு பதிவாகியுள்ளது.
நீர்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் அணை வரத்தும் வெகுவாய் குறைந்தது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 607 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 660 அடியாகக் குறைந்தது. நீர்மட்டம் 131.15 ஆக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அப்படியே வெளியேற்றப்படுகிறது.
எனவே, அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. வைகை அணையைப் பொறுத்த அளவில் 54.23 அடி நீர்மட்டம் உள்ளது. நீர்வரத்து ஆயிரத்து 174 கனஅடியாகவும், வெளியேற்றம் 960 கனஅடியாகவும் உள்ளது.
தற்போது மழை குறைந்ததாலும் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அப்போது மீண்டும் மழைப்பொழிவும், அணைக்கான நீர்வரத்தும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT