Last Updated : 09 Sep, 2019 04:41 PM

1  

Published : 09 Sep 2019 04:41 PM
Last Updated : 09 Sep 2019 04:41 PM

ஒரு பவுன் தங்க நகை ரூ.30 ஆயிரத்தைத் தொட்டதுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை: ஈவிகேஎஸ் இளங்கோவன் 

சிவகங்கை,

ஒரு பவுன் தங்க நகை ரூ.30 ஆயிரத்திற்கு விற்பதுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியபோது, "நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டிய அரசு, வேலை பார்க்கிறவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

கார் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு சாதனைகள் உண்டு. ஆனால், மோடிக்கு எந்த சாதனையும் கிடையாது. உடையை மாற்றிக் கொண்டு ‘போஸ்’ கொடுப்பது தான் அவரின் சாதனை.

வடமாநிலத்தவரின் அறியாமையைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தவர் மோடி. சிதம்பரத்தைக் கைது செய்தனர், சிவக்குமாரைக் கைது செய்தனர். நாளைக்கு யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என நினைத்தால் மக்கள் பொங்கி எழுவர் என்பதை மோடி மறந்துவிடக்கூடாது. சர்வாதிகாரியாக வரவேண்டும் என்ற முயற்சியில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், சர்வாதிகாரியான முசோலினி, ஹிட்லருக்கும் ஏற்பட்ட முடிவுகள் உங்களுக்கும் ஏற்படும்" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "100 நாள் வேலை என்ற சிறப்பான திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது, அதை நசுக்கிவிட்டனர். அந்தத் திட்டத்தை முழுமையாக நிறுத்த பாஜக முயல்கிறது.

பாஜக அரசுக்கு 100 நாள் சாதனை என்பது எதுவும் கிடையாது. தங்க நகை பவுன் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பதே 100 நாள் சாதனை.

தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் ஆனதால், தற்போது தமிழகத்தில் சத்தம்போட ஆள் இல்லை. தமிழக முதல்வர் எதற்கு வெளிநாடு சென்றார் என எனக்குத் தெரியவில்லை? ஆனால் தினமும் இரண்டு புகைப்படங்கள் வருகின்றன" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x