Published : 09 Sep 2019 04:27 PM
Last Updated : 09 Sep 2019 04:27 PM
திருச்சி
சென்னை குடிநீர் பிரச்சினை இன்னும் 3 ஆண்டுகளில் நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (செப்.9) ஆய்வு செய்தார். 2015-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாக அனுமதி பெற்று வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனை எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு மையத்தையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். மேலும், உணவகங்களில் இருந்து சேகரிக்கும் மழைநீர் மட்டுமல்லாது, சாலை மற்றும் பல்வேறு வணிக வளாகங்களில் இருந்து பெறப்படும் மழைநீரையும் சேகரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பெரியார் நகரில் 73 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவைத் திறந்துவைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் அற்புதமான திட்டம். அந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்திட்டம் அனைத்துப் பகுதிகளிலும் வேகமாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டும், எதிர்காலச் சந்ததியினரின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தினை 3 மாத கால அவகாசத்திற்குள் செயல்படுத்தும்படி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT