Published : 09 Sep 2019 02:55 PM
Last Updated : 09 Sep 2019 02:55 PM

ரவீந்திரநாத் குமாரின் முழு பேச்சையும் கேட்டால் உண்மை புரியும்: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

சென்னை

ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் முழு பேச்சையும் கேட்டால் உண்மை புரியும் என அவரது தந்தையும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்.9) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

ரயில்வே துறை தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா?

அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். அண்ணாவின் மொழிக் கொள்கைதான், எங்களின் மொழிக் கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. சில மாற்றங்களை மத்திய அரசு செய்தாலும், எங்களின் நிலையில் நாங்கள் உறுதியாக இருப்போம். கடைசி வரை அதற்காகப் போராடுவோம். எங்களின் கோரிக்கையை வலியுறுத்துவோம். அதனை அடையும் வரை நிறுத்த மாட்டோம்.

"நாம் அனைவரும் முதலில் இந்துக்கள்" என ஓ.பி.ரவிந்திரநாத் குமார் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளதே?

அவர் பேசியதில் முன் பகுதியையும் பின் பகுதியையும் விட்டுவிடுகிறார்கள். நடுப்பகுதியை மட்டும் சொல்லி பிரச்சினையாக்குகின்றனர். அந்த விமர்சனத்திற்குள்ளே செல்ல வேண்டாம். அவரின் பேச்சின் முதல் மற்றும் கடைசி பகுதியை இணைத்துக் கேட்டால் உண்மை புரியும்.

ஓ.பி.ரவீந்திரநாத்குமார்: கோப்புப்படம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் எவ்வளவு முதலீடுகள் வரும்?

ஏற்கெனவே ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 217 திட்டங்கள் கையெழுத்தாகின. இதில் 70 சதவீதத் திட்டங்களுக்கு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. முதல்வர் நாளை தமிழகம் வருகிறார். அவர் வந்த பின்பு, வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அவர் உரிய விளக்கத்தைத் தருவார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலை என்ன?

அதிமுக உறுதியாக இரு தொகுதிகளிலும் போட்டியிடும். மாபெரும் வெற்றியைப் பெறும்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட திமுக விதித்த நிபந்தனையை திரும்பப் பெற்றுக்கொண்டதே?

அது காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே நடைபெறும் பனிப்போர். அதற்கு கருத்து சொல்வது சரியாக இருக்காது.

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளின் சதவீதம் அதிகரிக்கப்படுமா?

கூடுதலாக வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறது. இது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும். மூத்த பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நதி நீர் பிரச்சினை குறித்து கேரள முதல்வரைச் சந்தித்து தமிழக அரசு என்ன வலியுறுத்தும்?

அந்தச் சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக செய்தி வரவில்லை.

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தால் குழப்பம் ஏற்படும் என கனிமொழி தெரிவித்துள்ளாரே?

எந்தவிதக் குழப்பமும் இருக்காது. தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. தமிழகத்தில் இருப்பது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம். வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்குவதற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதலாக வழங்குவார்கள். தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்துக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x