Published : 09 Sep 2019 02:25 PM
Last Updated : 09 Sep 2019 02:25 PM
சென்னை
உண்மையாக உழைத்தால் உண்மையான உயர்வைப் பெறலாம் என்பதற்கு, தமிழிசை சவுந்தரராஜன் மிகச்சிறந்த உதாரணம் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் மருத்துவர் அணி செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், தேசியச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார். 2014-ம் ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையே இருமுறை மக்களவைத் தேர்தலிலும், இருமுறை சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தமிழக பாஜக தலைமைப் பதவி, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது.
தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்
இந்நிலையில், அண்மையில் தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி, அவர் நேற்று தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருடைய பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, இன்று (செப்.9) சென்னை திரும்பிய பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "எப்படி இவ்வளவு பெரிய பதவி தமிழிசைக்கு திடீரென கிடைத்தது என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. ஆனால், உண்மையான உழைப்பு இருந்தால், ஒருநாள் நிச்சயமாக வெற்றிகளைப் பெறுவோம் என்பதற்கு உதாரணம்தான் தமிழிசைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் பதவி", என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT