Published : 02 May 2014 11:39 AM
Last Updated : 02 May 2014 11:39 AM

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை இன்று தொடங்குகிறது.

ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் இன்னும் மேற்கொள்ளாததால் இந்த ஆண்டும் இத்திட்டம் பெயரளவிலேயே செயல்படுத்தப்படும் என்றும், இதன் பயன்கள் ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்காது என்றுமே தோன்றுகிறது.

தொடக்கக் கல்வியை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதம் மிகவும் கவலையளிக்கிறது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், தனியார் பள்ளிகள் மூலம் குறைந்தது 2 லட்சம் குழந்தைகளாவது இலவசக் கல்வி பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2000 பேர் கூட பயன் பெறவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இச்சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. பிரபலமான பல தனியார் பள்ளிகள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை பணக்கார மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு நிரப்புவதுடன், அவர்கள் அனைவரையும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தவர்களாக கணக்குக் காட்டி இந்த சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குகின்றன.

இத்தனை முறைகேடுகளுக்கு பிறகும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையே ஒப்புக்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2013&14 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படவேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள், அதாவது வெறும் 40% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 3550 தனியார் பள்ளிகளில் சுமார் 1000 பள்ளிகளில் ஓரிடம் கூட ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. ஆனால், இந்த பள்ளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே, இவ்விஷயத்தில் தமிழகஅரசு எந்த அளவுக்கு அலட்சியமாகவும், பொறுப்பில்லாமலும் செயல்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

2014&15 ஆம் ஆண்டிலாவது இத்தகைய முறைகேடுகள் நடக்காதபடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் எத்தனை இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான கெடு முடிந்து ஒரு மாதமாகியும் இதுவரை எந்த பள்ளியும் அந்த விவரங்களை வெளியிடவில்லை; அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் எடுக்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் கல்வி பெறும் உரிமை காணல் நீராகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

கடந்த 2010 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங்,‘‘ நான் மண்ணெண்ணெய் விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் படித்தவன். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் கல்வி தான். ஒவ்வொரு மாணவ, மாணவியும் இந்த சட்டத்தை பயன்படுத்தி கல்வியின் உச்சத்தை எட்ட வேண்டும்’’ என்று கூறினார்.

ஆனால், இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் விதத்தைப் பார்க்கும்போது ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி எட்டாக்கனியாகவே நீடிக்கும் போலிருக்கிறது.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தத்துவத்தின்படி இந்த ஆண்டாவது இலவசக் கட்டாயக் கல்வி பெறும் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் இந்த சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களுக்கான ஏழை மாணவர்களை தமிழக அரசே பள்ளிக் கல்வித்துறை மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு தனியார் பள்ளிகள் மூலம் கல்வி வழங்க கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x