Published : 01 Jul 2015 03:34 PM
Last Updated : 01 Jul 2015 03:34 PM

இடைத்தேர்தல் வெற்றி பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமா?- கருணாநிதி விளக்கம்

இடைத்தேர்தல் வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஜெயலலிதா தனது நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது எரிச்சலும் சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் மிகுந்த நேர்மையுடனும் (?),தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான மேற்பார்வையுடனும் (?), எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே (?), எந்தவிதமான அமைச்சர்களின் ஆர்ப்பாட்டமுமின்றி (?), எதிர்க் கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் முறையாக ஜெயலலிதா பதிலளித்து (?) தேர்தல் ஆணையம் - காவல் துறை - அதிமுக எனும் முத்தரப்புக் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாராம்.

நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் இன்று மாத்திரம் 106 பக்கங்கள் விளம்பரங்கள் என்பதைப் பார்த்தாலே, எந்த அளவுக்கு துதிபாடிகள் அங்கே ஏராளமாக இருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே?

இந்தத் தேர்தல் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில், "இந்த இடைத் தேர்தலை 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டம்" என்று கூறி தனக்குத் தானே ஆறுதலும், பாதுகாப்பும் தேடிக் கொண்டிருக்கிறார். ’

ஆனால், 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டமா என்பதற்கு இன்றைய இந்துநாளிதழ் ஒரு களத்தில் வெற்றி - ஆனால் முழுப் போர் இன்னும் முடியவில்லை; சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த இடைத் தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று சொல்வது சிறிதும் பொருத்தமில்லாதது.

இடைத்தேர்தல் முடிவுகளும் பொதுத் தேர்தல் முடிவுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை; எனவே அவற்றை ஒப்பிட முடியாது என்ற தலைப்பில் விரிவாக ஜெயலலிதாவின் அவசரக் கருத்துக்கு எதிராக ஆணித்தரமாகவும் துணிச்சலாகவும் பதில் கூறியுள்ளது.

எனவே, அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அத்தனை அமைச்சர்களையும் அல்லும் பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க் கட்சிகள் எல்லாம் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதற்கொப்ப களத்தில் நிற்காத நிலையில், தேர்தல் கமிஷனின் தோளில் கை போட்டுக் கொண்டு பெற்றது வெற்றி தானா? நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த இடைத் தேர்தல்

வெற்றி! வெறும் காற்றில் வாள் வீசி வீராப்பு பேசி எகிறிக் குதிப்பதைப் போன்றது தான் இந்த வெற்றியும்!

வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் - சைதாப்பேட்டை அதிமுக கவுன்சிலர் ஒருவரும் - திருவொற்றியூர் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் - சேத்துப்பட்டு கவுன்சிலர் ஒருவரும் - சேப்பாக்கம் பகுதி அதிமுக மகளிரணியைச் சேர்ந்த ஒருவரும் - மற்றும் இது போல் அந்தத் தொகுதியைச் சேராத அதிமுகவினர் பலரும், இந்த இடைத் தேர்தலில் கள்ள வாக்கு அளித்து விட்டு வருவதை புகைப்படத்தோடு ஒரு புலனாய்வு இதழ் இந்தவாரம் எடுத்து வெளியிட்டு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வாக்குச்சாவடி அதிகாரிகளாக இருந்த அரசு அலுவலர்கள் அனைவரும் அதிமுக வின் பொறுப்பாளர்கள் சொல்வது போல செயல்பட வேண்டுமென்று உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டார்களாம்.

இதுபோன்ற சிலவற்றை மறைத்துவிட்டுதான் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியிலே வெற்றி பெற்றிருக்கிறார். இதற்குப் பெயர் தான் அதிமுக அகராதியில் இமாலய வெற்றி போலும்!

உண்மையிலேயே இப்படிப்பட்ட வெற்றியின் குணாதிசயங்களை நினைத்துத் தான் ஜெயலலிதா நேற்றையதினமே எம்எல்ஏவாக பதவியேற்கப் போகிறார் என்று மாலை ஏடுகளில் செய்தி வந்த போதிலும், பதவி ஏற்கவில்லையோ என்னவோ? இப்படியெல்லாம் அட்டூழியங்கள் நடக்குமென்று முன் கூட்டியே எதிபார்த்துத் தான் பிரதான எதிர்க் கட்சிகள் அங்கே போட்டியிடவே முன் வரவில்லை.

ஆனால் இந்த வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஜெயலலிதா தனது நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது எரிச்சலும் சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x