Published : 08 Sep 2019 02:37 PM
Last Updated : 08 Sep 2019 02:37 PM
தூத்துக்குடி,
அதிமுகவின் சரித்திரம் தெரிந்தால் அமைச்சர் ஜெயக்குமார் அநாகரிகமாக பேசமாட்டார் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா கனிமொழி இன்று(ஞாயிற்றுக்கிழமை) விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து அவர் சாலை வழியாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை மாவட்டம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்திருக்கிறார்கள்.
ஒரு மொழி, ஒரு மதம் என்று அவர்கள் நினைக்கக்கூடிய அடையாளத்திற்குள் இந்த நாட்டை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு முகம்தான் ஒரு நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை பறித்துக்கொள்ளும் வகையில் திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர். இதை திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது மாநில உரிமைகளில் தலையிட கூடியது" என்றார்.
ஜெயக்குமாருக்கு பதிலடி..
திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அமைச்சர் ஜெயக்குமாரின் தவறான, நாகரிகமற்ற பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
அதிமுகவே பலமுறை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கையில் எடுத்து நடத்தி இருக்கிறார்கள். அதிமுக சரித்திரம் தெரிந்திருந்தால் ஜெயக்குமார் இப்படி பேசியிருக்க மாட்டார்" என்றார்.
முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக. திமுக தமிழை வளர்த்ததா?
திமுக தமிழுக்கு ஒரேயொரு செம்மொழி மாநாடு நடத்தியது. செம்மொழி மாநாடு, குடும்ப மாநாடு. குடும்பத்தில் உள்ளவர்களை முன்னே அமரவைத்து, உலகம் முழுவதும் திரையில் காண்பித்ததுதான் மிச்சம். அதனால் ஏதாவது பயன் இருந்ததா? ஒன்றும் இல்லை.
தமிழை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, தமிழுக்கு நாங்கள் தான் பற்றாளன் என்கிறது திமுக. தமிழுக்குத் துரோகம் செய்தது திமுக" என மிகக் கடுமையாக சாடியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT