Published : 07 Sep 2019 03:52 PM
Last Updated : 07 Sep 2019 03:52 PM
புதுச்சேரி
புதுச்சேரியில் இலவச அரிசி விநியோகிக்கும் விவகாரம் தொடர்பாக, முதல்வரின் கோரிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்துள்ளார்.
புதுச்சேரியில் ரேஷனில் அரிசி தராதது தொடர்பாக சட்டப்பேரவையில் இரு நாட்களாக பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது. ஆளுநர் பணமாகத் தர வேண்டும் என்று குறிப்பிட்டு அரிசி வழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்துள்ளதாக துறை அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் தெரிவித்தனர்.
அரிசி போடாத மாதங்களுக்கான பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்? என்று அதிமுக, திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இப்பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்திக்கலாம் என்றும் பேரவையில் முடிவு எடுக்கப்பட்டது. அதை திமுக ஏற்றது. ஆனால் ஆளுநரைச் சந்திக்கும் முடிவை அதிமுக ஏற்கவில்லை.
அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியது. இதனிடையே சட்டப்பேரவையில் ரேஷனில் இலவச அரிசி விநியோகத்தைத் தொடர்வது தொடர்பான அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் மாளிகையான ராஜ்நிவாஸுக்கு இன்று (செப்.7) பிற்பகல் வந்தனர். ஆளுநர் மாளிகையினுள் சென்ற அவர்கள் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தித்துப் பேசினர்.
சுமார் 20 நிமிடச் சந்திப்புக்குப் பின்னர் அனைவரும் வெளியே வந்தனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற எம்.பி. மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்துப் பேசினோம்.
அப்போது, சட்டப்பேரவையில் விவாதித்தது போல புதுச்சேரி மாநில மக்களுக்குத் தொடர்ந்து அரிசி கொடுக்க வேண்டும் என்பதை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்தின் நகலை துணைநிலை ஆளுநருக்குக் கொண்டுவந்து கொடுத்து, புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் எங்களுக்கு அரிசிதான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை ஏகமனதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, அரிசி வழங்க ஏற்கெனவே அமைச்சர் கந்தசாமி அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டோம். இதற்காக இந்த ஆண்டு 6 மாத காலத்துக்கு ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கோப்பை துணைநிலை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் புதுச்சேரி மக்களுக்கு அரிசி கொடுக்க முடியாது என்று மத்திய அரசுக்கு எழுதியுள்ளதாக துணைநிலை ஆளுநர் ஒட்டுமொத்தமாக நாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். அதன் காரணமாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வந்துவிட்டோம்''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து நடந்தே சட்டப்பேரவைக்குச் சென்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் அலுவலகத்தில் கூடி ஆலோசித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இலவச அரிசி தொடர்பான முதல்வர், அமைச்சர்களின் கோரிக்கையை ஆளுநர் ஏற்காததால் மீண்டும் ஆளுநர், ஆட்சியாளர்கள் இடையே மோதல் உருவாகியிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT