Published : 13 Jul 2015 10:00 AM
Last Updated : 13 Jul 2015 10:00 AM

தேசபக்தி பற்றி கூற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகுதி இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்

தேசபக்தி பற்றி கூற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எவ்வித தகுதியும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். இதுகுறித்து, இளங்கோவன் நேற்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 23-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் மீது பாஜக திடீரென அக்கறை காட்டுவது சந்தேக கேள்வியை எழுப்புகிறது. இதற்கான விடை வரும் சட்டமன்றத் தேர்தலில் தெரியும்.

காந்தியடிகளை கொன்ற கோட்சேவை ஆதரித்த ஆர்எஸ் எஸ்காரர்கள்தான் காமராஜரையும் கொலை செய்ய முயற்சித்தனர். அத்தகைய சக்திகளின் வாரிசு களான பாஜகவினர் காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது ஊரை ஏமாற்றும் செயல்.

காமராஜர் பிறந்தநாளை தேசபக்தி கொண்டவர்கள் யாவரும் கொண்டாட உரிமை உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காமராஜரை கொலை செய்ய முயற்சித்த ஆர்எஸ்எஸ் வழியில் வந்த பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசபக்தி பற்றி கூற எவ்வித தகுதியும் இல்லை.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க போராடி வரும் பாஜக, அக்கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் அதிமுக கட்சிக்கு எதிராக செயல்படும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து போராட தயாராக உள்ளோம். மேலும், தேர்தலுக்கு முன்பாக யார் முதல்வர் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்காது. காரணம், தேர்தலுக்கு முன்பாக பிரதமர், முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கும் பழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.

மு.க.அழகிரி பாஜகவில் சேர இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் எந்த கட்சியிலும் சேர உரிமை உள்ளது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் எஸ்.டி. நெடுஞ்செழியன் மற்றும் திருவள்ளூர், தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமாகா கட்சியினர் ஏராளமானோர் அக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x