Last Updated : 06 Sep, 2019 10:38 AM

2  

Published : 06 Sep 2019 10:38 AM
Last Updated : 06 Sep 2019 10:38 AM

'முதலில் இந்து; அப்புறம்தான் மற்றது..' காவித் துண்டுடன் ரவீந்திரநாத் எம்.பி. பேச்சு- சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

தேனி,

நாம் அனைவரும் முதலில் இந்து, அப்புறம்தான் மற்றது... என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்டார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்.

காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய ரவீந்திரநாத்குமார், "திருச்சியில் நடைபெற்ற ரயில்வே துறை சார்பிலான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், இங்கே வருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது.

தேனி மாவட்டத்துக்கான போடி - மதுரை அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரியும் திண்டுக்கல் - லோயர்கேம்ப் புதிய ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுவருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது என்ற உணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸின் மகனுமான ரவீந்திரநாத்குமாரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x