Published : 05 Sep 2019 05:12 PM
Last Updated : 05 Sep 2019 05:12 PM
சென்னை
புறநகர் மற்றும் சென்னையை தவிர்த்த மாவட்டங்களில் கட்டாய ஹெல்மெட் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதியரசர் சத்திய நாரயணன் மற்றும் ஷேஷாயி அடங்கிய அமர்வில் இன்று (செப்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது மோட்டார் வாகன புதிய சட்ட விதிகளை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் இதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். மேலும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் இல்லையென்றால், இந்த வழக்கில் மனுதாரரை நீக்கிவிட்டு நீதிமன்றமே தாமாக வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளும் என தெரிவித்தார்..
ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகளுடைய கடமை என தெரிவித்த நீதிபதிகள், அரசின் நிர்வாக பணிகளை நீதிமன்றங்கள் நடத்த முடியாது எனவும் கூறினர்.
மேலும், கட்டாய ஹெல்மட் சட்டம் என்பது அரசின் சட்டம் எனவும், அது உரிய முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை தவிர போக்குவரத்து துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.
சென்னையை தவிர மதுரை போன்ற பெரு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளிலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அனைவருக்கும் சமுதாய பொறுப்பு உள்ளதாக தெரிவித்தனர். கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காட்சி ஊடகங்கள் தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT