Published : 07 Jul 2015 08:00 AM
Last Updated : 07 Jul 2015 08:00 AM

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடம்: ஒரு வாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, விளிம்பு நிலை மற்றும் ஏழை, எளிய மாணவர் களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் அப்படிச் செய்வதில்லை. எனவே, இப்பள்ளிகளில் 25 சதவீத இடங்களை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு விசாரித்து, ‘தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள மொத்த இடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள், மீதமுள்ள இடங்கள் பற்றி பள்ளிக்கல்வித் துறை இணையதளத்தில் 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை மேற்கண்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலாளர் ஆர்.பழனியாண்டி தாக்கல் செய் தார். அதில் கூறியிருந்ததாவது:

நீதிமன்ற உத்தரவுப்படி, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளின் தொடக்க நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள் 4,57,150. இதில், 25 சதவீத இடங்கள் 1,17,232. விளிம்புநிலை, ஏழை, எளிய மாணவர்களுக்கு இதுவரை 65,838 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் இடம் வழங்காத பள்ளிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அது கிடைத்ததும், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடம் வழங்க மறுக்கிற, பணம் கேட்கிற பள்ளிகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் கவனத் துக்கு பொதுமக்கள் கொண்டு செல்லலாம். ஒரு வாரத்துக்குள் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை அக்டோபர் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x