Published : 08 Jul 2015 05:37 PM
Last Updated : 08 Jul 2015 05:37 PM

விவசாயிகளின் வேதனைகளை கண்டுகொள்ளவில்லை: ஜெயலலிதா மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

விவசாயிகளின் நான்காண்டு வேதனைகளை கண்டுகொள்ளாமல் சுயநலத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை பயன்படுத்திகொள்ளும் போக்கை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக விவசாயிகள், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வழிதெரியாமல், அதற்காக வாங்கிய கடனுக்கு பதில் சொல்லமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில்கூட விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், இந்நிலை நீடித்தால் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதனால் நாட்டின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது” என்றாலும், விவசாயத்தை விட மனமில்லாமல் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர்கேட்டுப் போராடிவருகின்றனர். அதை வலியுறுத்தி தேமுதிக சார்பில் நானே நேரில் சென்று திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.

மக்கள் பிரச்சனைக்காக முதல் குரல் கொடுப்பது தேமுதிகதான். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில்சொல்ல முடியாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியின் குறைகளை சொல்லியே தப்பித்துக்கொள்வது என்ன நியாயம்?

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூங்காவூர் கிராமத்தை சார்ந்த மதியழகன் என்ற இளம்வயது விவசாயி பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டதாகவும், வலங்கைமான் ஒன்றியத்தில் ராஜாங்கம் என்ற விவசாயியும், இதே காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டதாகவும், மேலும் பலர் தற்கொலை செய்துகொண்டது வெளியே தெரியாமல் உள்ளதாகவும், அவர்கள் குடும்ப பிரச்சினையால்தான் தற்கொலை செய்துகொண்டார்கள் என தமிழக அரசும், காவல் துறையும் மூடி மறைப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு காரணங்களால் இயற்கையாக உயிரிழந்தவர்களைக்கூட, தனக்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்றுகூறி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் ஆதரவின்றி உள்ளதே, அக்குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்கின்ற எண்ணம் சிறிதும் வரவில்லையா?

மேட்டூர் அணையை திறந்தால் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு உரிய கால்வாய்களில் நீண்ட நாட்களாக தூர்வாராத காரணத்தினால் வண்டல்மண் படிந்து, ஆகாயத்தாமரைகளும், பிற செடி கொடிகளும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தூர்வாருதல், மதகுகளை பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல் போன்ற அடிப்படை பணிகள் எதையுமே செய்யாமல் வாய்ஜாலத்திலேயே இந்த அரசு காலத்தை கடத்துகிறது.

ஐந்து லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை, விவசாய இடுபொருட்களும் சரிவர கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல், அதே ஊரில் பெயரளவில் விவசாயிகளை வைத்துக்கொண்டு, முழுக்க முழுக்க ஆளுங்கட்சியை சார்ந்தவர்களை வரவழைத்து, கொடுக்கவேண்டியதை கொடுத்து, விவசாயிகளின் போர்வையில் பாராட்டுவிழா நடத்தி மகிழ்ச்சி அடையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயல் அல்லவா?

இதையெல்லாம் பார்க்கும்போது “மறையத்தான் போகிறது தலைவணங்கும் அநியாயம், மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு” என்ற புரட்சித் தலைவரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு நன்மைகளை செய்யாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் நான்காண்டு வேதனைகளை கண்டுகொள்ளாமல் சுயநலத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை பயன்படுத்திகொள்ளும் போக்கை கைவிட்டு, அவர்களின் இன்னல் தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x