Published : 13 Jul 2015 12:40 PM
Last Updated : 13 Jul 2015 12:40 PM

கலைஞர், நடிகர், நடிகைக்கு போதும்... மருத்துவருக்கு வாய்ப்பு கொடுங்கள்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் நல்ல நிர்வாகம் அமைய வேண்டுமென்றால் எதிர்கட்சித் தலைவர் வீட்டுக்கு கூட நான் செல்வேன். எனக்கு இதில் கவுரவம் கிடையாது. இதுபோன்ற அரசியல் கலாச்சார, ஆட்சி மாற்றம் தமிழகத்தில் வரவேண்டும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோவை மாநாட்டில் பேசினார்.

கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு நேற்று நடைபெற்றது. 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மாநாட்டு எழுச்சி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: நிச்சயமாக வரும் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக, அதிமுக கட்சிகளை புறக்கணித்துவிட்டு, பாமகவுக்கு வாய்ப்பு கொடுக்கும் காலம் வந்து விட்டது. இந்தியாவுக்கு மும்பை எவ்வளவு முக்கியமோ, அதுபோல தமிழகத்துக்கு கோவை முக்கியம். அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பது கொங்கு மண்டலம். இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் இன்று நலிவடைந்து கிடக்கிறது.

40 ஆயிரமாக இருந்த தொழிற்சாலைகள் எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்துள்ளது. 18 மணி நேர மின்வெட்டால் 60% தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். திராவிடக் கட்சிகளின் தவறான கொள்கையே இதற்கு காரணம்.

இரண்டு கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தியது போதும். இளைஞர்கள் மத்தியில் யார் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு கலைஞருக்கும், பின்னர் ஒரு நடிகருக்கும், அதன் பின் ஒரு நடிகைக்கும் என மாறி மாறி ஆட்சியைக் கொடுத்தீர்கள். இன்று ஒரு மருத்துவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.

முதலமைச்சர் என்றால் கடவுள் போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அவரும் ஒரு பொது ஊழியர் தான். மக்களுக்கு அதைச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

காமராஜர் ஆட்சியில் 12 ஆயிரம் பள்ளிகளைக் கட்டினார். ஆனால் இந்த திராவிடக் கட்சிகள் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளன. மன்னராட்சியில், மக்களுக்கு மன்னர் மீது அதிருப்தி ஏற்பட்டால் திருவிழா நடத்தப்படும். குடியையும், கூத்தையும் வழங்குவார்கள். அதில் பங்கேற்ற பிறகு மக்கள், மன்னர் மீதான அதிருப்தியை மறந்துவிடுவார்கள். அந்த நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.

4 வயது குழந்தை மது அருந்தும் காட்சியும், 3 வயது குழந்தை குட்கா போடும் காட்சியும், 15 வயது பெண் குடித்து விட்டு ரகளை செய்யும் காட்சியும் சமூக ஊடகங்களில் வருகிறது. ஒரு காலத்தில் மது அருந்தும் வயது 40 ஆக இருந்தது. பின்னர் 30, 20 எனக் குறைந்து 13 வயதை எட்டியுள்ளது. அதையும் மீறி 4 வயது குழந்தை கூட மது அருந்துகிறது. தமிழகத்தில் மதுத்திணிப்புக் கொள்கையே இத்தனைக் கொடுமைகளுக்கும் காரணம்.

2006-ல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி திட்டம். அடுத்து ஜெயலலிதா ஆட்சியமைத்தபோது போட்ட முதல் கையெழுத்து தங்கத் தாலி திட்டம். ஆனால் நாம் போடுகிற முதல் கையெழுத்து மதுவிலக்கை கொண்டு வருவதற்கான கையெழுத்தாக இருக்கும்.

பாமக ஆட்சிக்கு வந்தால், வெளிப்படையான, மின் நிர்வாகமாக இருக்கும். சேவை உரிமைச் சட்டத்தை 6 மாதத்தில் கொண்டு வருவோம். லோக் ஆயுக்தா சட்டத் தைக் கொண்டுவந்து ஊழல் இல்லாத நிர்வாகத்தைக் கொண்டு வருவோம். தகவல் உரிமைச்சட் டத்தைப் போல, சுகாதார உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

கிராமத்துக்கு ஒரு படித்த இளைஞர் என்ற வகையில் இளைஞர்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, தொழில் பயிற்சி கொடுத்து, நிதி கொடுத்து, மானியத்தைக் கொடுத்து முதலாளிகளாக மாற்றுவோம். 50 ஆண்டு காலத்தில் இரண்டு கட்சிகள் செய்யாத மாற்றத்தை 5 ஆண்டுகளில் கொண்டு வருவோம். நல்ல நிர்வாகத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்கு கூட நான் செல்வேன். எனக்கு இதில் கெளரவம் கிடையாது. அரசியல் கலாச்சார மாற்றம், ஆட்சி மாற்றம் தமிழகத்தில் வரவேண்டும்.

பார்முலாக்களை மாற்ற வேண்டும்

சமீபத்தில் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கவில்லை. எடைத்தேர்தல் தான் நடந்தது. அது ஜெயலலிதாவுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் நடந்த போட்டி. அது வெற்றியே கிடையாது. தருமபுரி தொகுதியில் தான் உண்மையான வெற்றி. உலகம் முழுவதும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க பல பார்முலாக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் இந்த திராவிடக் கட்சிகள் ஸ்ரீரங்கம், திருமங்கலம், ஆர்.கே.நகர் பார்முலாக்களை கண்டுபிடித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் நிறைவுரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x