Published : 31 Aug 2019 04:57 PM
Last Updated : 31 Aug 2019 04:57 PM

ஜெயலலிதாவின் கையெழுத்தால் தமிழகம் 'கார்' காலம் ஆனது: அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

காஞ்சிபுரம்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் மகேந்திரா சிட்டி தொழிற்பூங்காவில் இன்று (சனிக்கிழமை) மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரங்களை நட்டார். பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சீமான், விஜய்யை முன்னிலைப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது அவருடைய கருத்து. யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அதிமுக சாதாரண கோட்டை அல்ல, மாபெரும் எஃகு கோட்டை. எம்ஜிஆரின் கொள்கையாலும், பலரின் தியாகத்தாலும் விளைந்தது அதிமுக. எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பிக்கும்போது, 100 நாள்களில் கட்சி முடிந்துவிடும் என விமர்சித்தனர். ஆனால், அவர் 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தார். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி அவ்வளவுதான் என்றனர். ஆனால், ஜெயலலிதா தொடர்ந்து, அவரின் மறைவுக்குப் பிறகும் இன்றும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் நாங்கள்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழில்துறை வளர்ச்சி கண்டு, வேலைவாய்ப்புகள் பெருகின. வெளிநாடுகளுக்குச் சென்று இங்கு முதலீடு செய்யப்பட்டது. ஃபோர்டு, ஹூண்டாய் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கப்பட்டது. பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்தன. ஜெயலலிதாவின் கையெழுத்தால் தமிழகம் 'கார்' காலம் ஆனது. தொழில் முனைவோரை அதிகம் ஊக்கப்படுத்துவதை ஒப்பிட்டால், அதிமுக 100 மதிப்பெண்கள் என்றால், திமுக 20 மதிப்பெண்கள்தான்'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x