Last Updated : 12 May, 2014 10:26 AM

 

Published : 12 May 2014 10:26 AM
Last Updated : 12 May 2014 10:26 AM

மலைபோல் குவியும் குப்பைகளை அள்ளுவது யார்?: மாநகராட்சிக்கும் குடிசைமாற்று வாரியத்துக்கும் இடையே குழப்பம்

மயிலாப்பூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளவேண்டியது மாநகராட்சியா, குடிசைமாற்று வாரியமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் பல்லக்கு மாநகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள 39 குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்குள்ள வீடுகளில் உரு வாகும் குப்பைகளைக் கொட்ட முறையான வழிகள் இன்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த குடியிருப்புகள் 1970களில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், குப்பைகளை கொட்டு வதற்கு பழமையான முறை பின் பற்றப்பட்டு வருகிறது. குப்பை களைக் கொட்டுவதற்காக இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு நடுவே, புகைக்கூண்டு போல் ஒரு கூண்டு உள்ளது. இதன் வழியேதான் குடியிருப்போர் தங்கள் குப்பைகளை கொட்ட வேண்டும். அதனை அங்கிருந்து சேகரித்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்த குப்பைகளை யார் அள்ளுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து வருகிறது.

அப்பகுதியில் வசிக்கும், லக்ஷ்மி இதுபற்றி கூறுகையில், "குப்பைகளை வாரத்துக்கு ஒரு முறை யாராவது வந்து எடுத்து செல்வார்கள். சில நேரம் அப்படி வராமலும் இருப்பார்கள் இதனால் குப்பைகள் தேங்கி கிடந்து, துர்நாற்றம் வீசும். எப்போதும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்," என்றார்.

அதே பகுதியில் பல ஆண்டு களாக வசிக்கும் அன்பு கூறுகை யில், "மழை பெய்தால், இங்கு வாழவே முடியாது. வீடுகளின் அருகிலேயும், குடிநீர் குழாய் களின் அருகிலேயும் குப்பைகள் தேங்குவது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

குடிசைமாற்று வாரிய குடி யிருப்பு பகுதிகளுக்குள் சென்று குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் வேலை இல்லை. குப்பைகளை சேகரித்து ஒரு குறிப் பிட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்த்தால், அதை மாநகராட்சி எடுத்துக் கொள்ளும். மயிலைப் பகுதியில் குப்பைகளை அகற் றும் பொறுப்பு தனியார் ஒப்பந்த தாரரிடம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே அந்த வேலையை தனியார் ஒப்பந்ததாரர்தான் செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குழுக்கள் அமைத்து குப்பைகளை சேகரிக்க தேவை யான நிதியை தருவதற்கு மாநக ராட்சி தயாராக உள்ளது. ஆனால், குடிசைமாற்று வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து குடிசைமாற்று வாரிய தலைமை பொறியாளர் கூறியதாவது:

குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, எங்களிடம் இருந்த, பணியாட்களை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டோம்.

இந்த குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் பிரச்சினை களை கவனிக்க 500 வீடுகளுக்கு ஒருவரை நியமித் துள்ளோம். அது தவிர குடியிருப்பு களை பராமரிக்க நிதி ஏதும் ஒதுக்கப்படுவதில்லை. வீடுகளை கட்டுவதற்கு மட்டுமே நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படி இரு தரப்பினரும் மற்றவர்களை கை காட்டுவதால் இப்பகுதி மக்கள் குப்பைகளில் இருந்து விமோசனம் கிடைக்கா மல் தவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x