Published : 30 Aug 2019 12:49 PM
Last Updated : 30 Aug 2019 12:49 PM
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வகை வெடிகுண்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் இன்று செயலிழப்பு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் திலிபன் ராகவன்(25). நண்பர்களுடன் குளக்கரையில் பிறந்தநாளை கொண்டாடியபோது, அங்கு கிடைத்த வெடிகுண்டை உடைக்க முயன்றபோது வெடித்து சிதறியது. இதில், பலத்த காயமடைந்த திலிபன் ராகவன், சூர்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும், மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதில், ராக்கெட் லாஞ்சர் வகையை சேர்ந்த வெடிகுண்டு ஒன்றைக் கைப்பற்றினர். பின்னர், தொடர் சோதனை மேற்கொண்டபோது வேறு வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை அதே பகுதியில் உள்ள ஏரியில் நான்கு அடி பள்ளத்தில் வைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அனுமதி கிடைக்காததால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2-ல் வெடிகுண்டு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து ஏடிஜிபி, ஆபரேஷன் மூலம் வெடிகுண்டைச் செயலிழக்க செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மானாம்பதி ஏரியில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த பள்ளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது.
பின்னர், சரியாக இன்று காலை 9:52 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டது. ஆனால் அப்போது, வெடிகுண்டின் மேலிருந்த இரும்புக் கவசங்கள் மட்டுமே சிதறின. இதனால், மீண்டும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக 10:20 மணிக்கு வெடிக்கவைக்கப்பட்டது. இதில், வெடிகுண்டு முழுவதுமாக வெடித்துச் சிதறியது.
அப்போது, பயங்கர சத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, வெடித்துச் சிதறிய மூலப் பொருட்களை வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து, மானாம்பதி கிராம மக்கள் கூறும்போது, ''மானாம்பதி கோயில் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டால் சற்று அச்சத்தில் இருந்தோம். தற்போது, போலீஸார் ஏரிக்கரையில் வைத்து வெடிகுண்டை வெடிக்கவைத்து செயலிழக்க செய்ததால் நிம்மதி அடைந்துள்ளோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT