Published : 30 Aug 2019 11:59 AM
Last Updated : 30 Aug 2019 11:59 AM

ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி; விஜய் தான் முன்னணியில் இருக்கிறார்: சீமான்

சீமான்: கோப்புப்படம்

சென்னை

ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் யாருக்கு வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு திமுகவிடம் இருந்து என்ன பதில் வரும்? ஈழப்படுகொலைக்கு துணை நின்றவர்களே, ஈழப்படுகொலைக்கு நியாயம் கேட்கின்றனர்.

10 ஆண்டுகளாக ஐநாவில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேசாத அவர்கள், இப்போது ஏன் பேசுகின்றனர்? அதற்குக் காரணம் எங்கள் அரசியல் வலுப்பெறுகிறது. திராவிடக் கட்சிகளால் எல்லாமும் அழிவதை பார்க்கும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்குகின்றனர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் வீடுகளை அழிக்கவும், அவர்களை கொல்லவும் நிதி கொடுத்தது யார்? அங்கு அனைவருக்கும் மீண்டும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. அவர்களின் மறுவாழ்வுக்கு என இந்தியா நிதி ஒதுக்கியிருக்கிறதா?

சர்வதேச சமூகம், தமிழர் என்ற இனமா அல்லது இந்தியா என்ற பெருநாட்டின் நட்பா என்று பார்த்தால், இந்தியாவின் நட்பைத்தான் விரும்புவார்கள். அந்த இந்தியா தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. தமிழர்களை அழித்த இலங்கையின் நண்பனாக இருக்கிறது.

தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதனை ஐநாவில் பேசுவதைவிட நாடாளுமன்றத்தில் பேசுவதே முக்கியமானது”.

இவ்வாறு பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சீமான் விஜயை முன்னிலைப்படுத்துகிறாரா?

நான் முன்னிலைப்படுத்தித்தான் விஜய் முன்னிலைப்பட வேண்டுமா? அவர் முன்னணியில்தானே இருக்கிறார். இன்னும் ரஜினிகாந்த் ஒரு 4 படங்களில் நடிப்பார்? அதன்பிறகு யார் முதன்மை இடத்தில் இருப்பார்? விஜய்தானே இருப்பார். இரண்டு பேருக்கும் தான் போட்டி உள்ளது. ரஜினிக்குப் பிறகு விஜய்தான் முதன்மை இடத்தில் இருப்பார்.

ரஜினி, விஜய்: கோப்புப்படம்

வெற்றி இலக்கு இல்லாமல் நாம் தமிழர் செயல்படுகிறதா?

இலக்கு இல்லை என சொல்லமுடியாது. இலக்கு இல்லாமல் எப்படி பயணிக்க முடியும்? இங்குள்ள அரசியல் கட்சிகள் எப்படி வெற்றியப் பெறுகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் போராடும் போது, வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல்தான் செல்ல வேண்டும்.

இதனை உடனடியாக செய்ய முடியாது. உயர்ந்த அரசியலில் ஈடுபடுவது சாதாரணம் அல்ல. இன்றைக்கு ஏராளமான சாதிக் கட்சிகள், மத அமைப்புகள் இருக்கின்றன. இந்த உணர்வைத் தாண்டிய அரசியலை முன்னெடுப்பது மிகப்பெரிய போராட்டம்.

திராவிட இயக்கமே தோன்றி, 19 ஆண்டுகள் கழித்துத்தான் தேர்தல் களத்திற்கு வந்தது. நான் ரசிகர்களை தொண்டர்களாக்கி அரசியலுக்கு வரவில்லை. கமல், ரஜினி, விஜயகாந்த் போன்று நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களைத்தான் சந்தித்தேன். ஆகவே நாங்கள் வெற்றி பெற காலம் பிடிக்கும்.

அம்பேத்கர் சிலை உடைப்பு

இது ஒரு கேவலம்; தேசிய அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும். சாதி பாகுபாட்டைக் பாதுகாப்பது போல, 10% பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் தான் அதை எதிர்த்தோம்"

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x